சவூதி அரேபிய இராச்சியத்தில் பொதுமக்களின் விமான நிலையங்களை இலக்கு வைத்து அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளன.
2026 ஒக்டோபர் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. அத்துடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்தியுள்ளது.
சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் இலங்கை அரசாங்கம் தனது ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், பதற்ற நிலையைத் தணிக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் செயற்படுவதுடன், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.










