நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே இந்த வெற்றியின் மூலம் கட்சி தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் ஆளும் தவெக வெற்றி பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களைத் தோற்கடித்து தவெக இந்த வெற்றியைப் பதிவு செய்தது.
மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமன் 54,008 வாக்குகளைப் பெற்றார். அதிமுக வேட்பாளர் 47,450 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றார்.
தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் பி. சத்தியபாமா 66,841 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் எஸ். சுகன்யா 57,370 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் 45,280 வாக்குகளையும் பெற்றனர்.
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றிருந்தனர். எனினும், பின்னர் அந்த இரு சட்டமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு விஜய்யின் தவெகவில் இணைந்தனர். இதையடுத்து இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
2026 மே மாதம் தவெக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, விஜய்யின் அரசியல் செல்வாக்கை மதிப்பிடுவதற்கான ஆரம்பகட்டச் சோதனையாக இந்த இடைத்தேர்தல்கள் கருதப்பட்டன. தற்போதைய வெற்றியின் மூலம் இரு தொகுதிகளையும் தவெக தக்கவைத்துக் கொண்டுள்ளதுடன், அவற்றை மீண்டும் கைப்பற்றும் அதிமுகவின் முயற்சியும் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில், சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், வாக்காளர்களுக்குப் பணம் வழங்காமலும், எந்தவிதமான சலுகைகளையும் அளிக்காமலும் தவெக வெற்றி பெற்றுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார். ஊழல் சக்திகளுக்குப் பதிலாக மக்கள் சக்தியின் கோட்டையாகத் தமிழகம் விளங்குகிறது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பேரங்கள் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டியவர்களை விமர்சித்த விஜய், இரு தொகுதிகளிலும் தலா இரண்டு நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்ததைச் சுட்டிக்காட்டி விமர்சித்தவர்களுக்கும் தேர்தல் முடிவுகள் மூலம் வாக்காளர்கள் தகுந்த பதிலளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், ஏப்ரல் மாத சட்டமன்றத் தேர்தலின்போது மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய திமுக அரசு அனுமதித்திருந்தால், தேர்தல் முடிவுகள் வேறுபட்டிருக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலையும், தாராபுரத்தில் பி. சத்தியபாமாவையும் வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது ஒத்துழைப்பு வழங்கிய கூட்டணிக் கட்சிகள், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.









