இலங்கையில் தனியார் பேருந்து சேவைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல், பேருந்து சேவைகளின் செயற்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் முக்கிய வழித்தடங்களில் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, மேம்பட்ட சாரதி உதவி முறைமை (ADAS) மற்றும் சாரதிகளைக் கண்காணிக்கும் கமரா முறைமைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பாதுகாப்பான வாகன ஓட்டுதலை ஊக்குவிப்பதுடன், பேருந்துகளின் செயற்பாடுகளை அதிகாரிகள் மிகவும் திறமையாகக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆராயும் வகையில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாரஹேன்பிட்டியிலுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) தலைமையகத்திற்குச் சென்று புதிதாக நிறுவப்பட்ட கண்காணிப்பு மையத்தைப் பார்வையிட்டார்.
இதன்போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர், குறைந்தளவிலான மனித வளங்களைக் கொண்டு அதிக எண்ணிக்கையிலான பேருந்துகளை நிர்வகிப்பதில் நிலவும் சவால்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தீர்வாக அமையும் எனக் குறிப்பிட்டார்.
100 பேருந்துகளைக் கொண்ட ஒரு நிறுவனத்தை முறையாக நிர்வகிப்பதற்கு 25 அதிகாரிகளை நியமித்தாலும் அது கடினமான பணியாக இருக்கும் எனத் தெரிவித்த அவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் இரண்டு அல்லது மூன்று பேரைக் கொண்ட குழுவினராலும் கண்காணிப்புப் பணிகளை முன்னெடுக்க முடியும் எனச் சுட்டிக்காட்டினார். இது எந்தவொரு மாயாஜாலமும் அல்ல எனக் குறிப்பிட்ட அமைச்சர், இலங்கையில் இதுவரை போதியளவில் இல்லாத நவீன பொதுப் போக்குவரத்து முறைமையை அறிமுகப்படுத்தும் முயற்சியாகும் என்றும் தெரிவித்தார்.
புதிய டிஜிட்டல் கண்காணிப்புப் பிரிவின் ஊடாக, பேருந்துகள் உரிய கால அட்டவணைக்கு அமைய சேவையில் ஈடுபடுகின்றனவா, சாரதிகள் மற்றும் பேருந்து இயக்குநர்களின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன, அத்துடன் தொடர்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பன கண்காணிக்கப்படும் எனவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
இதேவேளை, மெட்ரோ பேருந்து சேவையை காலி, நுவரெலியா மற்றும் கம்பஹா உள்ளிட்ட புதிய நகர்ப்புறப் பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனுடன் மேலும் 50 பேருந்துகளை சேவையில் இணைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் மெட்ரோ பேருந்து சேவையுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது என அமைச்சர் வலியுறுத்தினார்.
நாட்டின் அன்றாடப் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுமார் 15,000 தனியார் பேருந்துகளும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான 5,000 பேருந்துகளும் தற்போது பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.










