இலங்கைக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2026 செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 734.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது இலங்கை ரூபாவில் சுமார் 242 பில்லியன் ரூபாவாகும்.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணப்பரிமாற்றமாகக் கிடைத்திருந்த நிலையில், இவ்வாண்டு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இதனடிப்படையில், 2026 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான முதல் ஒன்பது மாதங்களில் இலங்கைக்குக் கிடைத்த மொத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 6,865.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இது இலங்கை ரூபாவில் சுமார் 2,215.4 பில்லியன் ரூபாவாகும்.
கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 5,811.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே பணப்பரிமாற்றமாகக் கிடைத்திருந்தன. இதனுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அமெரிக்க டொலர் பெறுமதியில் 18.1 சதவீத அதிகரிப்பும், இலங்கை ரூபா பெறுமதியில் 27.4 சதவீத அதிகரிப்பும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, சுற்றுலாத்துறை ஊடாகத் தொடர்ந்து கிடைக்கும் வெளிநாட்டு வருமானமும் இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாயை அதிகரிப்பதற்கும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் பங்களித்து வருகின்றது.











