இந்தியாவில் சமூக ஊடகங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்ட 27 வயதான நிதி ஆலோசகர் ஒருவர், சென்னைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்ச்சியான இணையவழித் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த வி. ஹரிஷ் என்ற குறித்த நபர், “Finance with Harish” என்ற பெயரில் சமூக ஊடகங்களில் நிதி மற்றும் முதலீடுகள் தொடர்பான ஆலோசனைகளைப் பகிர்ந்து வந்துள்ளார். ஐந்து ஆண்டுகளாக இந்தத் துறையில் செயற்பட்டு வந்த அவர், கடந்த திங்கட்கிழமை இரவு, முட்டுக்காடு பகுதியில் அமைந்துள்ள வாடகை வில்லா ஒன்றுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்திய ஊடகங்களின் தகவல்களின்படி, ஹரிஷின் தந்தையான ஜே. விநாயகம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமான தற்கொலை மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நிதி ஆலோசனைகள் மற்றும் அவரது தொழில்சார் தகுதிகள் தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம் ஹரிஷின் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மற்றொரு சமூக ஊடகப் பிரபலமான ஜேசன் சாமுவேல், ஹரிஷை இணையவழியில் துன்புறுத்தியதாகவும், அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அச்சுறுத்தியதாகவும், இதனால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் ஹரிஷின் தந்தை தனது முறைப்பாட்டில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், உயிரிழப்பதற்கு முன்னர் ஹரிஷ் காணொளி ஒன்றைப் பதிவு செய்ததாகவும், அதில் தனது முடிவுக்கு ஜேசன் சாமுவேலே காரணம் என அவர் குற்றஞ்சாட்டியதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஜேசன் சாமுவேல், ஹரிஷின் தொழில்சார் தகுதிகள் மற்றும் நிதி ஆலோசனைகளை வழங்குவதற்கான அங்கீகாரம் தொடர்பில் நியாயமான கேள்விகளையே எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனைச் சபையின் (SEBI) தேவையான பதிவைப் ஹரிஷ் பெற்றிருக்கவில்லை என்றும், தனது தொழில்சார் தகுதிகள் குறித்து தவறான தகவல்களை வழங்கியதாகவும் சாமுவேல் குற்றஞ்சாட்டியுள்ளார். இருப்பினும், ஹரிஷ் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குச் செல்வார் எனத் தாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பலரால் முறைப்பாடுகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹரிஷின் பிரதான சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், பின்னர் அவர் புதிதாக உருவாக்கிய கணக்கும் நீக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹரிஷின் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்பட்டமைக்கான காரணங்கள், இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் உயிரிழப்பதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் காணொளி ஆகியவற்றை விசாரணையாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இயற்கைக்கு மாறான மரணம் தொடர்பில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஜேசன் சாமுவேலுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.










