1964ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் விடாமுயற்சி மற்றும் மன உறுதியால் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இலங்கை தடகள வீரர் ரணதுங்க கருணானந்தவைக் கௌரவிக்கும் வகையில் விசேட நினைவு அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அஞ்சல் முத்திரை நேற்று செவ்வாய்க்கிழமை வெகுஜன ஊடக அமைச்சில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
இலங்கையின் விளையாட்டு மரபைப் பாதுகாப்பதுடன், எதிர்காலத் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
1964ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் நடைபெற்ற 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியின்போது, ஏனைய போட்டியாளர்கள் அனைவரும் ஓட்டத்தை நிறைவு செய்த பின்னரும் கருணானந்த தொடர்ந்து ஓடி இலக்கை அடைந்தார். அவரது இந்த விடாமுயற்சி உலகளவில் கவனத்தை ஈர்த்ததுடன், அவருக்கு “துணிச்சலான தோல்வியாளர்” (Courageous Loser) என்ற பெயரையும் பெற்றுக்கொடுத்தது. இதன் மூலம் அவர் விடாமுயற்சி மற்றும் விளையாட்டுப் பண்பின் அடையாளமாகத் திகழ்ந்தார்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த நினைவு அஞ்சல் முத்திரை ஒரு தனிநபரைக் கௌரவிப்பதற்கான நடவடிக்கை மட்டுமல்ல எனக் குறிப்பிட்டார். கருணானந்த வெளிப்படுத்திய மன உறுதி, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி போன்ற உயரிய பண்புகளை அங்கீகரிப்பதற்கான அடையாளமாகவும் இது அமைவதாக அவர் தெரிவித்தார். மேலும், கருணானந்தவின் ஊக்கமளிக்கும் வாழ்க்கை வரலாறு ஜப்பானிய பாடசாலைப் பாடப்புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளமை, அவரது சாதனைகள் இலங்கையின் எல்லைகளைக் கடந்து நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைக் காட்டுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
1936ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி கண்டியில் பிறந்த ரணதுங்க கருணானந்த, கம்பளை ஜினராஜ கல்லூரி மற்றும் அம்பிட்டிய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார். பின்னர் இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் தடகளப் போட்டிகளில் பங்கேற்றார்.
நினைவு அஞ்சல் முத்திரை வெளியீட்டு நிகழ்வில் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமட்டா, சிரேஷ்ட அஞ்சல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கருணானந்தவின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.










