யாழ்ப்பாணம், நல்லூரில் முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் இராசையா பார்த்தீபன் எனப்படும் திலீபனின் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 14 பேரிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, சிலை நிறுவுவதற்கான நிதியுதவி, நிர்மாணப் பணிகள், அதனைப் பிரபலப்படுத்துதல் மற்றும் நிகழ்வை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் தொடர்புபட்டதாகக் கூறப்படும் நபர்களிடமே இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், திலீபன் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், குறித்த சிலையைப் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளதுடன், வழக்குப் பொருளாக நீதிமன்றத்திலும் சமர்ப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, இந்த விவகாரத்தில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார்.
கடந்த செப்டெம்பர் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் திலீபன் நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதியில் நிறுவப்பட்டிருந்த சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடைந்த மறுநாளே சிலை அகற்றப்பட்டிருந்தது.
இதற்கு முன்னர், அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, சிலையை அகற்றுவதற்கு முன்னர் பொலிஸார் உரிய நீதிமன்றத்தில் விடயங்களை அறிக்கையிட்டிருந்ததாகத் தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட அமைப்புகளை ஊக்குவிப்பது இலங்கைச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
திலீபன் 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நல்லூரில் இந்திய அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.










