நெதர்லாந்து பிரதமர் ரொப் ஜெட்டனும், ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த ஹொக்கி வீரரும் அவரது துணைவருமான நிக்கோலஸ் கீனனும் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்தத் தகவலை இருவரும் கடந்த திங்கட்கிழமை இன்ஸ்டாகிராம் பதிவொன்றின் மூலம் வெளியிட்டுள்ளனர்.
“மிகவும் விசேடமான ஒருவர் எங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். குட்டியே, 2027ஆம் ஆண்டில் சந்திப்போம்” என அவர்கள் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கருமுட்டை தானம் செய்தவர், வாடகைத் தாயாகச் செயற்படும் லிசா மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ள இருவரும், “உங்கள் உதவியின்றி இது எதுவும் சாத்தியமாகியிருக்காது” எனத் தெரிவித்துள்ளனர்.
ரொப் ஜெட்டனின் அரசியல் கட்சியான D66 வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே குழந்தைகளைக் கொண்ட தம்பதியினரின் உதவியுடன் இந்தக் கர்ப்பம் சாத்தியமாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வாடகைத் தாயும் கருமுட்டை தானம் செய்தவரும் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வணிக நோக்கிலான வாடகைத் தாய் ஏற்பாடு அல்ல எனவும், வாடகைத் தாயும் கருமுட்டை தானம் செய்தவரும் ரொப் ஜெட்டன் மற்றும் நிக்கோலஸ் கீனனுக்கு அறிமுகமானவர்கள் எனவும் கட்சி விளக்கமளித்துள்ளது. எதிர்காலத்தில் தந்தையராகவுள்ள இருவரின் குழந்தை பெறும் கனவை நனவாக்க உதவுவதில் அவர்கள் மகிழ்ச்சியடைவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாடகைத் தாயான லிசா கருத்துத் தெரிவிக்கையில், “எமது அன்பான நண்பர்களின் கனவை நனவாக்க உதவும் ஒரு விசேட வழியாக வாடகைத் தாயாகச் செயற்படுவதை நான் கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
ரொப் ஜெட்டனும் நிக்கோலஸ் கீனனும் 2024 நவம்பர் மாதம் தமது நிச்சயதார்த்தத்தை அறிவித்திருந்தனர்.
1987ஆம் ஆண்டு நெதர்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள வெகெல் நகரில் பிறந்த ரொப் ஜெட்டன், அருகிலுள்ள உடென் நகரில் வளர்ந்தார். நைமேகன் முகாமைத்துவக் கல்லூரியில் கல்வி பயின்ற அவர், பின்னர் நெதர்லாந்தின் ரயில்வே உட்கட்டமைப்பைப் பராமரிக்கும் ProRail நிறுவனத்தில் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
2017ஆம் ஆண்டு D66 கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான அவர், பின்னர் முன்னாள் பிரதமர் மார்க் ரூட்டே தலைமையிலான அரசாங்கத்தில் காலநிலை மற்றும் எரிசக்திக் கொள்கைகளுக்குப் பொறுப்பான அமைச்சராகப் பணியாற்றினார். மார்க் ரூட்டே தற்போது நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளராக உள்ளார்.










