இலங்கைக்குள் 4.6 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருளைக் கடத்தி வர முயன்றதாகக் கூறப்படும் 22 வயதுடைய மியன்மார் பிரஜை ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று புதன்கிழமை அதிகாலை, விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்றபோது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து தாய் எயார்வேஸ் விமானமான TG-307 மூலம் இன்று அதிகாலை சுமார் 1.45 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரின் பயணப் பொதிகளைச் சோதனையிட்டபோது, ஆடைகள், இனிப்புப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று பொதிகளிலிருந்து 4.646 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 46.46 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மீட்கப்பட்ட போதைப்பொருளுடன் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பிலுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










