அரபிக்கடலில் ஈரானைச் சேர்ந்த படகொன்றிலிருந்து 526 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருட்களை இந்திய கடலோரக் காவல்படை கைப்பற்றியுள்ளது.
இவற்றின் பெறுமதி 3,000 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது படகில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கடலோரக் காவல்படை வெளியிட்ட அறிக்கையின்படி, குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை (ATS) மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு ஒன்றுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட உளவுத்தகவல் அடிப்படையிலான கூட்டு நடவடிக்கையின்போதே இந்தப் பறிமுதல் இடம்பெற்றுள்ளது.
சந்தேகத்திற்கிடமான ஈரான் படகொன்று லட்சத்தீவுக்கு மேற்குப் பகுதியில் செல்வதை கண்டறிந்த இந்திய கடலோரக் காவல்படை, அதனைத் தொடர்ந்து கண்காணித்து வந்தது.
தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ‘விரட்டித் துரத்தும் நடவடிக்கை’ மூலம் படகு இடைமறிக்கப்பட்டு, அதில் தந்திரோபாய முறையில் ஏறி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பெருமளவிலான போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டதாக கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
மேலும், படகில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணை மற்றும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக படகும் அதன் பணியாளர்களும் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இந்திய கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பது, போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளைத் தகர்ப்பது மற்றும் நாடுகளைக் கடந்து இடம்பெறும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பது ஆகியவற்றில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.









