இந்தியா-கன்னியாகுமரியில் சமூக ஊடகம் மூலம் ஏற்பட்ட காதல் தொடர்பு, 12ஆம் வகுப்பு மாணவி ஒருவரை கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்து, மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவமாக மாறியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைகளின்படி, கன்னியாகுமரியைச் சேர்ந்த குறித்த மாணவி இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வந்த நிலையில், தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடர்பு பின்னர் காதல் உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, குறித்த இளைஞரை நேரில் சந்திப்பதற்காக மாணவி தனது வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அவரை சந்தித்த பின்னர் வாடகை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும், அந்தச் சம்பவத்தை சந்தேகநபர் தனது கைப்பேசியில் இரகசியமாகப் பதிவு செய்ததாகவும், பின்னர் அந்தப் பதிவைக் கொண்டு மாணவியை தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதிவை இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி, மாணவியை தமது கோரிக்கைகளுக்கு இணங்கச் செய்ய முயன்றதாகவும், அவர் மறுத்த நிலையில் குறித்த காணொளியை சமூக ஊடகத்தில் பதிவேற்றியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
காணொளி பரவியதால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி, உதவி கோரி உறவினர் ஒருவரிடம் சம்பவத்தைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், உதவுவதாகக் கூறிய அந்த உறவினரும் மாணவியை பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் மற்றொரு நபரிடம் அவரை ஒப்படைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் மாணவி ஒரு குடியிருப்பில் சுமார் ஒரு வார காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்தக் காலப்பகுதியில் உடல் மற்றும் உளவியல் ரீதியான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதுடன், கட்டாயப்படுத்தி மதுபானம் அருந்தச் செய்ததாகவும், தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏழு நாட்களுக்குப் பின்னர் அங்கிருந்து தப்பிய மாணவி தனது வீட்டுக்குத் திரும்பியதாகவும், அங்கு பெற்றோரிடம் நடந்த சம்பவங்களைத் தெரிவித்ததையடுத்து அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட காணொளியின் டிஜிட்டல் தடயங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்காக பல்வேறு இடங்களில் சோதனைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சமூக ஊடகத் தொடர்பை ஏற்படுத்திய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவர்களை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டமான போக்சோ (POCSO) சட்டம் உள்ளிட்ட ஆறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இளைஞர்களின் இணையப் பாதுகாப்பு, பெற்றோரின் கண்காணிப்பு மற்றும் சமூக ஊடகங்கள் ஊடான சிறார்களை இலக்குவைக்கும் இணையத் தொடர்புகள் குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பியுள்ளது.
சிறார்களை இலக்குவைக்கும் இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்காக இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கண்காணிப்பை அதிகரிப்பதுடன், வயது சரிபார்ப்பு முறைகள் மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை விரைவாக அகற்றுவதற்கான முறைப்பாட்டு நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும் என சிறுவர் உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகள் தொடரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆலோசனை மற்றும் தேவையான ஆதரவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









