கொழும்பு துறைமுகத்தில் 280 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தளவாட மையத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்தமைக்கான காரணங்களில், துறைமுகத்தில் 10 ஏக்கர் காணியை ஒதுக்குவது தொடர்பான ஒப்பந்தம் குறித்த கரிசனைகளும் அடங்குவதாக துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கொள்கலன் முனையங்களுக்கு இடையில் அமைந்துள்ள 10 ஏக்கர் காணியைத் தளவாட நிறுவனமொன்றுக்கு ஒதுக்குவதற்கு இந்த ஒப்பந்தத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.
முன்மொழியப்பட்ட முதலீட்டுக்கு அரசாங்கம் ஆதரவளித்த போதிலும், குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட விதம் தொடர்பில் கரிசனைகள் காணப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். தாம் பதவியேற்ற பின்னர் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக தனிப்பட்ட முறையில் முயற்சிகளை மேற்கொண்டதாகவும், நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகளை இலங்கைக்கு அழைத்து கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் அவர் கூறினார்.
“நிறுவனத்தின் அதிகாரிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். இந்த முதலீட்டுக்கு நாம் ஆதரவளிப்பதையும் தெளிவுபடுத்தினோம். எனினும், உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால், ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் எங்களால் முன்னோக்கிச் செல்ல முடியவில்லை” என அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார். சந்தேகத்துக்குரிய ஒப்பந்தங்களின் அடிப்படையில் முதலீடுகளை முன்னெடுப்பது, ஏனைய சாத்தியமான முதலீட்டாளர்களையும் ஊக்கமிழக்கச் செய்யக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், கொழும்பு துறைமுகத்தில் முன்மொழியப்பட்டிருந்த 280 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தளவாட மையத் திட்டம் முன்னெடுக்கப்பட மாட்டாது என இலங்கை துறைமுக அதிகாரசபை ஏற்கனவே அறிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு நிறுவப்பட்ட South Asia Commercial and Logistics Hub (SACLH) என்ற கூட்டு முயற்சி நிறுவனத்தின் ஊடாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதில் சீனாவின் China Merchants Port Holdings Company Limited நிறுவனம் 70 சதவீத பங்குகளையும், இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் Access Engineering PLC ஆகியன தலா 15 சதவீத பங்குகளையும் கொண்டிருந்தன.
வெளிப்புறச் சூழ்நிலைகள், வர்த்தகக் காரணிகள் மற்றும் பங்குதாரர்களின் தனிப்பட்ட நலன்கள் தொடர்பில் மீளாய்வு செய்த பின்னர், திட்டத்தைத் தொடர வேண்டாம் எனப் பங்குதாரர்கள் தீர்மானித்ததாக துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், பங்குதாரர்கள் முதலீடு செய்த சுமார் 29.8 மில்லியன் அமெரிக்க டொலர் பங்குமூலதனத்தை, ஒழுங்குமுறைத் தேவைகள் மற்றும் செயற்பாட்டுச் செலவுகளுக்கு உட்பட்டு, அவர்களின் பங்கு விகிதங்களுக்கு ஏற்ப மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், கொழும்பு துறைமுகத்தில் மாற்றுத் தளவாட மையமொன்றை அரச–தனியார் பங்காண்மை (PPP) முறையின் கீழ் அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிட்டுள்ளதாக துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது. இதற்கான முதலீட்டாளர்கள் போட்டித்தன்மை வாய்ந்த ஏல நடைமுறையின் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர்.










