இந்தியாவின் புதுடெல்லியில் ‘கரப்பான் பூச்சி’ (Cockroach) போராட்ட இயக்கத்தின் திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் பொலிஸார் பாரிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும், அவ்வியக்கத்தின் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று சனிக்கிழமை, டெல்லி முழுவதும் பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும், வீதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டதுடன், ஜந்தர் மந்தரில் உள்ள போராட்ட இடத்துக்குச் செல்வதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) நிறுவனர் அபிஜீத் திப்கே மற்றும் மேலும் இரு தலைவர்கள் மும்பையிலிருந்து டெல்லிக்கு வந்தபோது தடுத்து வைக்கப்பட்டதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. எனினும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பான விவரங்களை டெல்லி பொலிஸார் உறுதிப்படுத்தவில்லை.
இந்தப் போராட்ட இயக்கம், இந்தியத் தலைமை நீதியரசர் சூர்ய காந்த் வேலையற்ற இளைஞர்களைக் ‘கரப்பான் பூச்சிகள்’ எனக் குறிப்பிட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், வேலையின்மை, பரீட்சை வினாத்தாள் கசிவுகள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களை மையமாகக் கொண்ட இளைஞர்கள் தலைமையிலான பரந்த போராட்ட இயக்கமாக இது வளர்ச்சியடைந்துள்ளது.
தற்போதைய போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளில் தேர்தல் சீர்திருத்தங்களை முன்னெடுத்தல் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதும் அடங்குகிறது. எனினும், பாரபட்சம் அல்லது முறைகேடுகள் இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த ஜூலை மாதம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்த பாரிய போராட்டத்தின்போதும் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றிருந்தன. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியக் கல்வி அமைச்சர் பதவி விலகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









