இலங்கைக்குக் கடல் வழியாகக் கடத்தப்படவிருந்த 137 கிலோகிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே இந்தக் கைப்பற்றல் இடம்பெற்றுள்ளது.
இந்திய நிதி அமைச்சின் தகவலின்படி, வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (DRI) அதிகாரிகள் ஒக்டோபர் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் கரையோரக் கிராமமொன்றில் உளவுத் தகவல்களின் அடிப்படையில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சட்டவிரோதச் சந்தைப் பெறுமதி இந்திய ரூபாவில் 100 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் கரையோரப் பகுதியில் பெருமளவிலான போதைப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு, பின்னர் கடலின் நடுப்பகுதியில் மற்றொரு படகுக்கு மாற்றி இலங்கைக்குக் கடத்தப்படவுள்ளதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத் தகவலையடுத்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சோதனையின்போது ஆறு பயணப் பைகளிலிருந்து வெள்ளி நிறத் தாள்களால் சுற்றப்பட்ட 27 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பொதியும் சுமார் ஐந்து கிலோகிராம் எடையைக் கொண்டிருந்ததாகவும், அவற்றில் அதிக செறிவுடைய மெத்தம்பெட்டமைன் எனச் சந்தேகிக்கப்படும் வெள்ளை நிறப் படிகப் பொருள் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஏற்பாட்டாளரின் இருப்பிடத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்ததாகச் சந்தேகிக்கப்படும் இந்திய ரூபா 10 இலட்சம் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப்பொருட்களைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு நான்கு சக்கர வாகனங்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தக் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நால்வர், இந்தியாவின் 1985ஆம் ஆண்டின் போதைப்பொருட்கள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் (NDPS Act) கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கரையோரப் பகுதிகளில் போதைப்பொருட்களைச் சேமித்தல், கொண்டு செல்லுதல் மற்றும் கடத்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இந்த வலையமைப்பு ஈடுபட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இந்திய நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கரையோரப் பகுதியில் அண்மைய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் மீட்பு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என இந்திய நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச போதைப்பொருள் கடத்தலுக்காக இந்தியக் கரையோரப் பகுதிகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.










