இலங்கை கிரிக்கெட் விளையாட்டு வீழ்ச்சியடைவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டை மறுசீரமைத்து அபிவிருத்தி செய்வதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், கிரிக்கெட் விளையாட்டின் தரத்தை மேம்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளை அடைவதற்கும் அரசாங்கம் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.
“கிரிக்கெட் விளையாட்டு முடிவுக்கு வருவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் தேவையான செயல்முறைகளை எமது அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது” என அவர் கூறினார்.
சட்டமியற்றும் நடவடிக்கைகளுக்கு சிறிது காலம் தேவைப்படும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், முன்மொழியப்பட்டுள்ள மறுசீரமைப்புகள் இலங்கை கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்த உதவும் என நம்பிக்கை வெளியிட்டார்.
கடந்த அரசாங்கங்களும் கிரிக்கெட் விளையாட்டில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள முயற்சித்த போதிலும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாக அவர் தெரிவித்தார். எனினும், தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியின் ஆதரவுடன் இந்தச் செயல்முறையை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“கடந்த அரசாங்கங்கள் இதற்கு முயற்சித்தபோது அமைச்சர்கள் பதவியிலிருந்து அனுப்பப்பட்டனர். ஆனால், நான் இன்னும் அமைச்சராக இருக்கிறேன். சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரும் எமக்கு ஒத்துழைக்கின்றனர். இனிவரும் காலங்களில் கிரிக்கெட் விளையாட்டைச் சீரமைக்க நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம். கிரிக்கெட் விளையாட்டு வீழ்ச்சியடைய நாம் இடமளிக்க மாட்டோம்” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலைமை குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
முன்னாள் இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வாவின் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், தற்போதைய நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக ஹேஷா விதானகே சுட்டிக்காட்டியதுடன், கிரிக்கெட் விளையாட்டை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.










