இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட 71.24 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை இந்தியாவின் சென்னை பகுதியில் இந்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதுடன், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்திய நிதியமைச்சு இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டில் இதுவரை ஒரே தடவையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஹெரோயின் பறிமுதல்களில் இதுவும் ஒன்றாகும் என நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நவம்பர் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் சென்னையில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்த இந்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான வாகனமொன்றையும் அதனுடன் சென்ற இருசக்கர வாகனமொன்றையும் வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த வாகனத்தில் இருந்து 69 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 71.24 கிலோகிராம் நிறையுடைய வெள்ளை கலந்த நிறத்திலான தூள் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து குறித்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த ஹெரோயின் போதைப்பொருள் சென்னையை இடைத்தங்கல் மையமாகப் பயன்படுத்தி, திருச்சிராப்பள்ளி (திருச்சி) ஊடாகக் கொண்டு செல்லப்பட்டு, கடல் மார்க்கமாக இலங்கைக்குக் கடத்தத் திட்டமிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










