இந்தியாவின் புதுடில்லியில் நடைபெறவுள்ள இந்தியா பியனாலே (Biennale) 2026 கலைக் கண்காட்சியில், இலங்கையைச் சேர்ந்த 11 கலைஞர்களின் படைப்புகள் விசேட கண்காட்சியொன்றின் ஊடாகக் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
அடையாளம், நினைவுகள் மற்றும் கலாசாரப் பன்மைத்துவம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்படும் இந்தக் கண்காட்சிக்கு ‘Island of Many Selves – Identity, Memory and the Plurality of Belonging’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பன்முகக் கலாசார மரபுகளையும் சமகாலக் கலைத்துறைப் பார்வைகளையும் சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தும் நோக்கில், புகழ்பெற்ற இலங்கை கலைஞர்களின் படைப்புகள் இதில் இடம்பெறவுள்ளன.
இந்தக் கண்காட்சியை இலங்கை கட்டடக் கலைஞர் பிலிப் வீரரத்ன, PWA Architects நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கவுள்ளதுடன், கசுன் ஜயமான்னே கண்காட்சியின் கலைக் கண்காணிப்பாளராகச் செயற்படவுள்ளார்.
இந்திய கலாசார அமைச்சின் சார்பில், இலங்கைக்கான கண்காட்சியை ஏற்பாடு செய்யுமாறு சரண் அப்பாராவினால் பிலிப் வீரரத்னவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா பியனாலே 2026, 2026 டிசம்பர் 4ஆம் திகதி முதல் 2027 மார்ச் 21ஆம் திகதி வரை புதுடில்லியின் பல்வேறு கலாசார நிலையங்களில் நடைபெறவுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் பொது இடங்கள் இதில் உள்ளடங்குகின்றன.
‘Tat Tvam Asi (You Are That) – Reconnecting in an Age of Distraction’ (நீயே அதுவாக இருக்கிறாய் – கவனச்சிதறல்கள் நிறைந்த காலத்தில் மீண்டும் இணைதல்) என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இக்கலை நிகழ்வு, தனிநபர்கள், சமூகங்கள், நினைவுகள் மற்றும் இடங்களுக்கு இடையிலான தொடர்புகளை ஆராயவுள்ளது.
இலங்கை சார்பில் அனோலி பெரேரா, சூடாமணி க்ளோவ்ஸ், கயான் பிரகீத், ஹேமா ஷிரோணி, ஜகத் வீரசிங்க, கிங்ஸ்லி குணதிலக்க, பிரதீப் தலவத்த, பிரியந்த உடகெதர, சாஸ்கியா பின்டலன், சேனக சேனநாயக்க மற்றும் சிவசுப்பிரமணியம் கஜேந்திரன் ஆகிய 11 கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
ஒவ்வொரு கலைஞரும் தமது தனித்துவமான கலை அணுகுமுறையின் ஊடாக இலங்கையின் வரலாற்று அனுபவங்கள், சமூக யதார்த்தங்கள் மற்றும் பரிணமித்து வரும் கலாசார அடையாளங்கள் குறித்து வெளிப்படுத்தவுள்ளனர்.
இலங்கையை ஒரே தேசிய அடையாளத்திற்குள் மட்டுப்படுத்தாமல், பல நூற்றாண்டுகளாக இடம்பெற்ற வர்த்தகம், குடியேற்றம், காலனித்துவச் சந்திப்புகள், மத மரபுகள் மற்றும் அரசியல் மாற்றங்கள் ஆகியவற்றின் தாக்கங்களுடன் கூடிய பன்முக அடையாளத்தைக் காட்சிப்படுத்துவதே இக்கண்காட்சியின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் சமகாலக் கலைத்துறையை சர்வதேச பார்வையாளர்கள் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், புதுடில்லியில் உள்ள லலித் கலா அகாடமியில் இலங்கையின் கண்காட்சி இடம்பெறவுள்ளது.










