இலங்கையில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம் வகைகள் மனித நுகர்வுக்கு ஏற்ற தரத்தில் உள்ளனவா என்பதைக் கண்டறியும் நோக்கில், பல்வேறு ஐஸ்கிரீம் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) மாதிரிகளைச் சேகரித்துள்ளது.
கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் (ITI) ஒத்துழைப்புடன் இந்தப் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், சுகாதார அமைச்சும் சந்தையில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களைப் பரிசோதிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இதற்காக உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தரமற்ற உணவுப் பொருட்கள் தொடர்பான சம்பவங்களை அதிகாரிகள் நீதிமன்றங்களில் அறிக்கையிடவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இலங்கையின் 1980ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உணவுச் சட்டம் மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் SLS 223:2017 தரநிலைகளுக்கு அமைய, ஐஸ்கிரீம் எனப் பெயரிட்டு விற்பனை செய்யப்படும் பொருட்களில் குறிப்பிட்ட அளவு பால் கொழுப்புச் சத்து காணப்படுவது அவசியமாகும்.
தேவையான அளவு பால் கொழுப்புச் சத்து இல்லாமல் தாவரக் கொழுப்புகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களை ஐஸ்கிரீம் எனக் குறிப்பிட்டு விற்பனை செய்ய முடியாது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தகைய பொருட்கள் உரிய முறையில் ‘Frozen Dessert’ (உறையவைக்கப்பட்ட இனிப்பு வகை) எனப் பெயரிடப்பட்டே விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தரநிலைகளைப் பூர்த்தி செய்யாத பொருட்களைக் கண்டறிவதுடன், தவறான பெயரிடல் மூலம் நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுப்பதுமே இந்தப் பரிசோதனைகளின் முக்கிய நோக்கமாகும்.
இலங்கையில் ஐஸ்கிரீம் உற்பத்திப் பொருட்களின் தரம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளுக்கு இணங்குதல் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.










