மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்வதாகக் கூறி 17 வயது சிறுவனை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட நபருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 13ஆம் திகதி நீதியரசர்களான பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் பி. குமாரரத்னம் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை நிராகரித்தே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, 2013ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி பிலியந்தலை பகுதியில் மேலதிக வகுப்புக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுவனை சந்தேகநபர் அணுகியுள்ளார்.
சிறுவன் கல்வி கற்கும் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகப் பணியாற்றுவதாகத் தன்னை அறிமுகப்படுத்திய அவர், தனது மோட்டார் சைக்கிளில் சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார்.
எனினும், சிறுவனை அவரது வீட்டிற்கு அருகில் இறக்கிவிடுவதற்குப் பதிலாக, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
பின்னர், சிறுவன் இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்பாடல் நிலையமொன்றில் இருந்த ஒருவரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனது தந்தையிடம் சம்பவத்தைத் தெரிவித்ததையடுத்து, தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
வழக்கு விசாரணையின் பின்னர், சிறுவனை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபரை ஹோமாகம மேல் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.
அத்துடன், 5,000 ரூபாய் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 25,000 ரூபாய் இழப்பீடும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
இதற்கு எதிராகத் தாக்கல் செய்த மேன்முறையீட்டில், சிறுவனின் சம்மதத்துடனேயே பாலியல் செயற்பாடு இடம்பெற்றதாகவும், சிறுவனின் சாட்சியத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது என்றும் குற்றவாளி தரப்பில் வாதிடப்பட்டது.
எனினும், குறித்த செயற்பாட்டிற்கு தான் சம்மதிக்கவில்லை என சிறுவன் தெளிவாக சாட்சியமளித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றவாளியின் வாதத்தை நிராகரித்தது.
மேலும், சிறுவனை குற்றவாளியின் வீட்டிற்கு அழைத்துச் சென்ற சூழ்நிலைகள் மற்றும் அச்சம் காரணமாக அங்கிருந்து தப்பிக்கவோ அல்லது உதவிக்காகக் குரல் எழுப்பவோ முடியவில்லை என்ற சிறுவனின் விளக்கத்தையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்தது.
சம்பவம் இடம்பெற்ற பின்னர் சிறுவன் தனது தந்தையிடம் உடனடியாகத் தகவல் தெரிவித்தமையும், அதனைத் தொடர்ந்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டமையும் அவரது சாட்சியத்திற்கு வலுச்சேர்ப்பதாக நீதியரசர்கள் குறிப்பிட்டனர்.
அதேவேளை, சிறுவனின் சாட்சியத்தில் காணப்பட்ட சிறிய முரண்பாடுகள் வழக்குத் தரப்பின் ஆதாரங்களைப் பாதிக்கவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதனடிப்படையில், மேன்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம், 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 29ஆம் திகதி ஹோமாகம மேல் நீதிமன்றம் வழங்கிய குற்றத்தீர்ப்பையும் தண்டனையையும் உறுதிப்படுத்தியது.
மேலும், சிறைத்தண்டனையானது குற்றவாளி தண்டிக்கப்பட்ட திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










