தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக, அனைத்து மாகாணங்களிலும் 2026 நவம்பர் 20ஆம் திகதி நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வுகள் தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுகளுக்கான புதிய திகதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய நேர்முகத் தேர்வு திகதிகள்:
- மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணம் – நவம்பர் 29, 2026
- வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் சபரகமுவ மாகாணங்கள் – நவம்பர் 28, 2026
- ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்கள் – நவம்பர் 26, 2026
- மத்திய மாகாணம் – டிசம்பர் 01, 2026
இந்தத் திகதி மாற்றம் நவம்பர் 20ஆம் திகதி நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வுகளுக்கு மாத்திரமே பொருந்தும் எனவும், நவம்பர் 21ஆம் திகதி முதல் திட்டமிடப்பட்டுள்ள நேர்முகத் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாடசாலை விருப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான ஆசிரியர் ஆட்சேர்ப்பு விண்ணப்ப முறைமை 2026 நவம்பர் 19ஆம் திகதி முதல் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்டிருந்ததைப் போன்று நவம்பர் 19ஆம் திகதியுடன் இந்த முறைமை முடிவடையாது எனவும், விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்காக அழைப்பு விடுக்கப்படும் நாளில் இரவு 8 மணி வரை இணையவழி முறைமையைப் பயன்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேர்முகத் தேர்வு நடைபெறும் திகதிக்குள் அழைப்புக் கடிதம் கிடைக்காத விண்ணப்பதாரர்கள், நேர்முகத் தேர்வு நடைபெறும் இடத்திலுள்ள காத்திருப்பு அறைக்கு அதிகாலையிலேயே வருகை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் 2026 ஒக்டோபர் 30ஆம் திகதி இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட பெயர்ப்பட்டியலில் தமது பெயர் இடம்பெற்றுள்ள பக்கத்தின் பிரதியையும், அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறான விண்ணப்பதாரர்களுக்கான இணையவழி முறைமை அணுகல் வசதி காலை 8 மணி முதல் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
அதன்போது, விண்ணப்பதாரர்கள் இணையவழி முறைமையைப் பயன்படுத்தியவாறே நேர்முகத் தேர்வு மற்றும் செயன்முறைப் பரீட்சையில் பங்கேற்க முடியும்.
மேலும், தங்களது பாடசாலை விருப்பங்களை உள்ளடக்கிய ஆவணங்களின் அச்சுப் பிரதிகளை அன்றைய தினம் இரவு 8 மணி வரை நேர்முகத் தேர்வு நடைபெறும் இடத்தின் காத்திருப்பு அறையில் சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திகதி மாற்றத்தினால் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.











