2024/2025 கல்வியாண்டுக்கான மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும், 2026 ஒக்டோபர் மாதத்திற்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு இன்று வியாழக்கிழமை வழங்கப்படவுள்ளதாக லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், 2024/2025 கல்வியாண்டுக்கான நிலுவையில் உள்ள புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை 2026 டிசம்பர் மாதத்தில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கான நிதியுதவியைத் தொடர்ச்சியாகவும் எவ்வித தேவையற்ற தாமதங்களுமின்றியும் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில், புலமைப்பரிசில் கொடுப்பனவு நடைமுறைகளைச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நம்பிக்கை நிதியம் குறிப்பிட்டுள்ளது.
மாணவர்கள் தமது கல்விச் செலவுகள் மற்றும் ஏனைய அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவுவதுடன், அவர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமைகளைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மஹாபொல புலமைப்பரிசில் மாதாந்தக் கொடுப்பனவு 100 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய 5,000 ரூபாவாக இருந்த கொடுப்பனவு தற்போது 10,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கான நிதியுதவியை வலுப்படுத்துவதும், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் நிதிச் சுமையைக் குறைப்பதும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகவே இந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை வினைத்திறனுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் தடையின்றியும் வழங்குவதற்காக நிதி மற்றும் நிர்வாக ஏற்பாடுகளைத் தொடர்ந்து வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மஹாபொல நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளது.










