பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் இந்தியாவின் மும்பையில் இன்று திங்கட்கிழமை வீதி கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்றுள்ளனர்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் முதல் நாளான இன்று இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 2024ஆம் ஆண்டு புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெற்ற பின்னர், வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மேற்கொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு விஜயமாக இது அமைந்துள்ளது.
பாரம்பரிய தலைப்பாகைகளை அணிந்த இசைக் கலைஞர்கள் சடங்கு முறையிலான மேளங்களை இசைக்க, புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் உள்ளூர் சிறுவர்கள் வீசிய பந்துகளை வில்லியம் மற்றும் கேட் ஆகியோர் தடுத்தாடினர். இதன்போது பார்வையாளர்களுடன் சிரித்துப் பேசியதுடன், அவர்களுடன் கலந்துரையாடியும் மகிழ்ந்தனர்.
தெற்கு மும்பையின் பாரம்பரியப் பகுதிகளில் ஒன்றான பல்லார்ட் எஸ்டேட்டில் உள்ள குறுகிய வீதியொன்றில் இந்தக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. சுமார் 13 மில்லியன் மக்கள் வசிக்கும் மும்பை நகரில் விளையாட்டு மைதானங்கள் குறைவாகக் காணப்படுவதால், இரவு பகலாக வீதிகளில் விளையாடப்படும் கிரிக்கெட் அந்நகரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் நிதி மையமாக விளங்கும் மும்பையின் மெட்ரோ ரயில் சேவையில் இருவரும் பயணிக்கவுள்ளனர். பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறைகளை ஊக்குவிப்பதற்கும் பிரித்தானியாவும் இந்தியாவும் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகளின் அடையாளமாக இந்த மெட்ரோ ரயில் சேவை கருதப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, நாளை செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படவுள்ள எர்த்ஷாட் பரிசுக்கான இறுதிப் போட்டியாளர்களையும் அவர்கள் சந்திக்கவுள்ளனர்.
பருவநிலை மாற்றத்திற்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு, 2020ஆம் ஆண்டு இளவரசர் வில்லியத்தினால் ஆரம்பிக்கப்பட்டதே எர்த்ஷாட் பரிசுத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் ஐந்து வெற்றியாளர்களுக்கும் தலா ஒரு மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் (சுமார் 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்பட்டு, அவர்களின் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கு ஆதரவு அளிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் இறுதிக் கட்டமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லியில் இருவரும் சந்திக்கவுள்ளனர்.
44 வயதான கேட் மிடில்டன், குறிப்பிடப்படாத வகை புற்றுநோய்க்காக முன்னெச்சரிக்கை அடிப்படையிலான கீமோதெரபி சிகிச்சையைப் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது உத்தியோகபூர்வ பணிகள் கணிசமாகக் குறைக்கப்பட்டிருந்தன.
தற்போது புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நிலையில், அவர் படிப்படியாகப் பொது நிகழ்வுகளில் பங்கேற்பதை அதிகரித்து வருகிறார். எனினும், இதற்கு முன்னர் இளவரசர் வில்லியம் மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்களில் அவர் இணைந்திருக்கவில்லை.
2024ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவரது குறிப்பிடத்தக்க வெளிநாட்டுப் பயணமாக, கடந்த மே மாதம் சிறுவயது குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சி தொடர்பான தனது பணியின் ஒரு பகுதியாக இத்தாலிக்கு தனியாக இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










