கடுவெல நகரில் அமைந்துள்ள மின்சாதன விற்பனை நிலையத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியினர் மற்றும் அவர்களது இரண்டு பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு மின்சாரக் கோளாறு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஆரம்பகட்ட விசாரணைகளில் மின்சாரக் கோளாறு காரணமாக தீ பரவியிருக்கலாம் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடுவெல நகரில் இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் இயங்கி வந்த மின்சாதன விற்பனை நிலையத்தில் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மாலபே, தலஹேன பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் குறித்த கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மின்சாதன விற்பனை நிலையத்தை நடத்தி வந்ததுடன், அதன் மேல் மாடியில் தங்களது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர்.
முந்தைய நாள் வியாபார நடவடிக்கைகளை நிறைவு செய்த பின்னர் குடும்பத்தினர் மேல் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோதே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ கட்டிடம் முழுவதும் பரவியதால், மேல் மாடியில் இருந்த நால்வரும் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து குடும்பத்தினரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், கடுமையான தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் 35 வயதுடைய தந்தை, 28 வயதுடைய தாய், 5 வயதுடைய மகள் மற்றும் 2 வயது 9 மாதங்களான மற்றுமொரு மகள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது முல்லேரியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










