இலங்கையர்களை ஆட்கடத்தல் மூலம் இந்தியாவுக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்டர்போல் (INTERPOL) சிவப்பு அறிவித்தலின் அடிப்படையில் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர், இந்தியாவுக்கு மீள அனுப்பப்பட்ட நிலையில், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையினால் (NIA) கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுமடம் இம்ரான் என அடையாளம் காணப்பட்ட குறித்த சந்தேகநபர், இந்த ஆட்கடத்தல் வழக்கில் 15ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், நீண்டகாலமாகத் தலைமறைவாகியிருந்ததாகவும் இந்திய தேசிய புலனாய்வு முகமை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செல்லுபடியாகும் ஆவணங்களைப் பயன்படுத்தி இலங்கையர்களை கனடாவுக்கு அனுப்புவதற்கான பயண ஏற்பாடுகளைச் செய்து தருவதாகப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, அவர்களை இந்தியாவுக்குக் கடத்தும் சதித்திட்டத்தில் இம்ரான் தீவிரமாகப் பங்கேற்றதாக விசாரணையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்காகப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து அவர் பணம் பெற்றுக்கொண்டதாகவும், பின்னர் அந்தப் பணத்தை சட்டவிரோத ஹவாலா பணப் பரிமாற்ற வழிமுறைகள் ஊடாக இந்தியாவிலுள்ள ஏனைய சந்தேகநபர்களுக்கு அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களைக் கடத்தி தடுத்து வைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு உதவியதாகவும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்த விசாரணைகள் 2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் செல்லுபடியாகும் பயண ஆவணங்களின்றி இலங்கையர்கள் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்குள்ள பல இடங்களில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டம், வெளிநாட்டினர் சட்டம் மற்றும் கடவுச்சீட்டுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர், 2021 ஜூலை 13ஆம் திகதி இந்த விசாரணைகளைப் பொறுப்பேற்ற தேசிய புலனாய்வு முகமை, குற்றச் சதி, ஆட்கடத்தல், மோசடி மற்றும் குடிவரவு, கடவுச்சீட்டுச் சட்ட மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
இதே வழக்கில் தலைமறைவாகியிருந்த ஏனைய இரு சந்தேகநபர்களான சீனி ஆபுல் கான் மற்றும் இம்ரான் கான் ஆகியோர் முறையே 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்டதாகவும் அந்த முகமை தெரிவித்துள்ளது.
இவர்கள் இருவருக்கும் எதிரான வழக்கு தற்போது பெங்களூருவிலுள்ள தேசிய புலனாய்வு முகமை வழக்குகளுக்கான விசேட நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்திய தேசிய புலனாய்வு முகமையின் கோரிக்கைக்கு அமைய இன்டர்போல் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் மூலம் அண்மைய கைது மற்றும் நாடு கடத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும், புதுமடம் இம்ரான் இலங்கையில் எவ்வாறான சூழ்நிலையில் தடுத்து வைக்கப்பட்டார் அல்லது எந்தத் திகதியில் கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பான மேலதிக விபரங்களை இந்திய தேசிய புலனாய்வு முகமை வெளியிடவில்லை.










