இந்தியாவின் செஸ் வரலாற்றில் புதிய மைல்கல் ஒன்று எட்டப்பட்டுள்ளது. 22 வயதான அனுஜ் ஸ்ரீவத்ரி, இந்தியாவின் 100ஆவது செஸ் கிராண்ட்மாஸ்டராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முதலாவது கிராண்ட்மாஸ்டராகப் புகழ்பெற்ற விஸ்வநாதன் ஆனந்த் உருவெடுத்து சுமார் நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 7ஆவது ASEAN Plus தனிநபர் திறந்த செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் அனுஜ் ஸ்ரீவத்ரி இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து உருவான முதலாவது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
போட்டியின் ஆரம்பச் சுற்றில் தோல்வியடைந்த போதிலும், சிறப்பான முறையில் மீண்டெழுந்த அவர், ஒன்பது சுற்றுகளின் முடிவில் ஏழு புள்ளிகளைப் பெற்று சம்பியன் பட்டத்தை வென்றார்.
சொஃப்ட்வேர் பொறியியல் துறையில் தொழில் வாய்ப்பைத் துறந்து, செஸ் கிராண்ட்மாஸ்டராக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்குவதற்காகப் போட்டிகளில் தொடர்ந்து ஈடுபட்டமை அவரது சாதனையை மேலும் குறிப்பிடத்தக்கதாக மாற்றியுள்ளது.
2020ஆம் ஆண்டில் சர்வதேச மாஸ்டர் (International Master) பட்டத்தைப் பெற்ற அவர், அதன் பின்னரும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று செஸ் விளையாட்டின் உயரிய பட்டமான கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை இலக்காகக் கொண்டு பயணித்தார்.
இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பயணம் 1988ஆம் ஆண்டு ஆரம்பமானது. அப்போது ஐந்து முறை உலகச் சம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், இந்தியாவின் முதலாவது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, சர்வதேச செஸ் அரங்கில் இந்தியா வலுவான நாடாக உருவெடுத்ததுடன், தற்போதைய உலகச் சம்பியனான டி. குகேஷ், ஆர். பிரக்ஞானந்தா மற்றும் அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட முன்னணி வீரர்களையும் உருவாக்கியுள்ளது.
2026 ஜூலை முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் மாத்திரம் இந்தியா தனது அண்மைய ஐந்து கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்கியுள்ளது. இது அந்நாட்டில் செஸ் விளையாட்டுத் திறமைகள் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதைக் காட்டுகின்றது.
இந்திய செஸ் சம்மேளனத்தின் தலைவர் நிதின் நரங், அனுஜ் ஸ்ரீவத்ரியின் சாதனைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது இந்திய செஸ் விளையாட்டுக்குப் பெருமைமிக்க தருணம் எனக் குறிப்பிட்ட அவர், அடுத்த இலக்காக 200 கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்குவதை அறிவித்துள்ளார்.
தீபாவளிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் அனுஜ் ஸ்ரீவத்ரி இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளமை, இந்திய செஸ் ரசிகர்களுக்கு மேலும் ஒரு கொண்டாட்டத்திற்கான காரணமாக அமைந்துள்ளது. (இந்திய ஊடகங்கள்)










