கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் நடவடிக்கையின்போது ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தன்னைத் தவறாக வழிநடத்தியதாகவும், ஆவணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடே இறுதியில் தேரர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இதுதொடர்பான நீதிமன்றத் தீர்ப்பின் பிரதியொன்றை ஆராய்ந்ததாகவும், ஜனாதிபதி செயலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் காணப்பட்ட தொழில்நுட்பக் குறைபாடு நீதிமன்றத்தின் தீர்மானத்தில் தாக்கம் செலுத்தியதைப் புரிந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் B 7417/10 மற்றும் 40042 ஆகிய இலக்கங்களைக் கொண்ட இரண்டு வழக்குகளை எதிர்கொண்டிருந்ததாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் சட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பான மேலதிக சிரேஷ்ட செயலாளர், மன்னிப்பு வழங்குவது தொடர்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் அனுமதி அவசியம் எனத் தமக்குத் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
எனினும், தேவையான ஆவணங்கள் அமைச்சுக்கு அனுப்பப்படவில்லை என்றும், உரிய அனுமதியைப் பெறாமல் தனது கையொப்பம் பெறப்பட்டதாகவும் மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். “இது என்னைத் தவறாக வழிநடத்திய செயலாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது ஜனாதிபதி பதவிக்காலத்தில் அதிகாரிகளால் இழைக்கப்பட்ட இந்தத் தவறின் விளைவாகவே ஞானசார தேரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாகவும், அந்தத் தீர்ப்பு சரியானது என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அதேவேளை, தனது நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய அதிகாரிகளால் இந்தத் தவறு இடம்பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், பௌத்த மதகுருமாரிடமும் மன்னிப்புக் கோரியுள்ளார்.
ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடு தொடர்பாக பௌத்த பிக்குகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் விளக்கம் கோரியதைத் தொடர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.










