குவைத்திலிருந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கிப் பயணித்த ஜசீரா எயார்வேஸ் விமானத்தில், இலங்கைப் பெண் ஒருவர் இன்று திங்கட்கிழமை அதிகாலை ஆண் குழந்தையொன்றைப் பெற்றெடுத்துள்ளார்.
திருகோணமலையைச் சேர்ந்த 30 வயதுடைய குறித்த பெண், 2024ஆம் ஆண்டு வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றுவதற்காக குவைத்துக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை 2.52 மணியளவில் குவைத் நகர விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட J9-551 விமானத்தில் பயணித்தபோது அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, விமானப் பணியாளர்களின் உதவியுடன் அவர் விமானத்திலேயே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். பிரசவத்தின்போது எவ்வித சிக்கல்களும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரசவத்தை எதிர்பார்க்கும் பெண்களுக்கு விமானப் பயணத்தில் பொதுவாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில், குறித்த பெண் இறுக்கமான டெனிம் காற்சட்டையை அணிந்து தனது கர்ப்பத்தை விமான நிறுவன அதிகாரிகளிடமிருந்து மறைத்துப் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்தத் தகவல் தொடர்பில் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.
குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து, விமானி கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து, விமானம் தரையிறங்கியதும் தாய்க்கும் குழந்தைக்கும் அவசர மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் அம்புலன்ஸ் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் தயார்நிலையில் வைக்கப்பட்டனர்.
பின்னர், தாயும் குழந்தையும் மேலதிக மருத்துவப் பராமரிப்புக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இருவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.










