இலங்கையின் முதலாவது இன்சுலின் உற்பத்தித் தொழிற்சாலை, 3 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், 2027ஆம் ஆண்டு உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காலி, கொக்கலை ஏற்றுமதிச் செயலாக்க வலயத்தில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலை, Premium International Injectable (Pvt) Ltd நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், தேவையான சரிபார்ப்பு நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் அடுத்த ஆண்டு உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இன்சுலின் மருந்துக்கு மேலதிகமாக, மயக்க மருந்துகள், வலி நிவாரணிகள் உள்ளிட்ட பல்வேறு மருந்துப் பொருட்களையும் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் 33 வகையான மருந்துகளை உற்பத்தி செய்யும் வகையில் தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒக்டோபர் 17ஆம் திகதி தொழிற்சாலையைப் பார்வையிட்ட சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மருந்து இறக்குமதியில் நாட்டின் தங்கியிருப்பைக் குறைப்பதும், உள்நாட்டு மருந்து உற்பத்தியை வலுப்படுத்துவதும் அடுத்த பத்து ஆண்டுகளுக்கான அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
இலங்கையின் மருத்துவமனை கட்டமைப்புக்குத் தேவையான மருந்துகளில் தற்போது சுமார் 85 முதல் 90 சதவீதமானவை இறக்குமதி செய்யப்படுவதாகவும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் 10 முதல் 15 சதவீதம் வரையிலேயே உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அதேவேளை, மருத்துவமனைகளுக்கான மருந்து விநியோகத் தேவைகளில் சுமார் 96 சதவீதத்தை அரசாங்கத்தால் பூர்த்தி செய்ய முடிந்துள்ளதாகவும், விநியோகஸ்தர்கள் இல்லாத காரணத்தால் 37 வகையான மருந்துகளைக் கொள்வனவு செய்வதில் இன்னும் சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு மருந்து உற்பத்தியை விரிவுபடுத்துவதன் மூலம் இறக்குமதிக்காகச் செலவிடப்படும் அந்நியச் செலாவணியைச் சேமிப்பதுடன், மருந்துகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் வருமானத்தையும் ஈட்ட முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனம் (SPMC) ஊடாக மாலைதீவுக்கு மருந்துகளை விநியோகிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், திமோர்-லெஸ்டே உள்ளிட்ட பிற நாடுகளிடமிருந்தும் கோரிக்கைகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்துடன் கூட்டு முயற்சியாக இந்த இன்சுலின் உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 15 ஆண்டுகால மருந்து விநியோக ஒப்பந்தமும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்த பின்னர், உற்பத்தி செய்யப்படும் மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.










