மாத்தறையில் சிறுத்தைப் பல் ஒன்றை 50,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 வயதுடைய சந்தேகநபரை, தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க மாத்தறை மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் பேருவளைப் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், ஒக்டோபர் 14ஆம் திகதி உடவளவை தேசிய பூங்காவின் பனஹதுவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட சிறுத்தைப் பல்லுடன் சந்தேகநபர் அன்றைய தினமே மாத்தறை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரைப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இலங்கைக்குரிய சிறுத்தை (Panthera pardus kotiya) விலங்கின மற்றும் தாவரப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் முழுமையாகப் பாதுகாக்கப்படும் விலங்கினமாகும். பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்களை வைத்திருத்தல், கொண்டு செல்லுதல், காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் தொடர்பான சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாறான குற்றங்கள் தொடர்பான தகவல்களை 1992 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










