Sri Lanka Tamil News Site

பிரபல “தொடர் கொலையாளி” சார்ள்ஸ் சோப்ராஜ் விடுதலை

- Advertisement -

பிரான்ஸின் தொடர் கொலையாளியான சார்லஸ் சோப்ராஜை (Charles Sobhraj) விடுவிக்க நேபாள உயர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சார்லஸ் சோப்ராஜ் 1970 களில் ஆசியா முழுவதும் நடந்த தொடர் கொலைகளுக்கு காரணமானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு வட அமெரிக்க சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற வழக்கில் 2003 ஆம் ஆண்டு முதல் நேபாளத்தில் சிறைச்சாலையில் இருந்த 78 வயதாகும் சோப்ராஜ் உடல்நலக் காரணங்களுக்காக விடுவிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது கைதியின் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை சிறையில் வைத்திருக்க அவருக்கு எதிராக வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்பதால் அவரை விடுவிக்கவும் 15 நாட்களுக்குள் அவரை பிரான்ஸுக்கு நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறிய குற்றங்களுக்காக பிரான்சில் பல சிறைத்தண்டனைகளை அனுபவித்த சோப்ராஜ் 1970 களின் முற்பகுதியில் உலகம் முழுவதும் பயணம் செய்யத் தொடங்கி தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் தங்கினார்.

போதைப்பொருள் கொடுத்து, அதன்பின் கொள்ளையிட்டு நபர்களை கொலை செய்வதற்கு முன்னர் அவர்களை வசீகரிப்பதும், அவர்களுடன் நட்பு கொள்வதும் சோப்ராஜின் செயல்பாடாக இருந்தது. அவர்களில் பலர் ஆன்மீக தேடல்கொண்ட மேற்கத்தேய நாட்டவர்களாவர்.

1975 இல் பட்டாயாவில் உள்ள கடற்கரையில் பிகினி அணிந்திருந்த ஒரு இளம் அமெரிக்கப் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுவே சோப்ராஜின் முதல் கொலையென கருதப்படுகிறது.

- Advertisement -

சோப்ராஜ் 1972 மற்றும் 1982 க்கு இடையில் 20 கொலைகளை செய்துள்ளார் என்று நம்பப்படுகிறது.

இவர் நபர்களின் கழுத்தை நெரித்து அல்லது அடித்து அல்லது எரித்து கொலைசெய்தார். அவர் தனது அடுத்த இலக்குக்கு பயணிக்க  கொலையுண்ட ஆண்களின் கடவுச்சீட்டை அடிக்கடி பயன்படுத்தினார்.

1976 ஆம் ஆண்டு டெல்லி விடுதியில் பிரான்ஸ் சுற்றுலாப் பயணி ஒருவரை விஷம் கொடுத்து கொலைசெய்ததாக சோப்ராஜ் இந்தியாவில் கைது செய்யப்பட்டார். இந்த கொலைக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

1986 இல் அவர் சிறையிலிருந்து தப்பித்திருந்த நிலையில் இந்திய கடலோர மாநிலமான கோவாவில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை நீடிக்கப்பட்டது.

சோப்ராஜ் இறுதியில் 21 ஆண்டுகள் இந்திய சிறைச்சாலையில் கழித்தார், 1997 இல் விடுவிக்கப்பட்ட அவர் மீண்டும் பாரிஸுக்கு சென்றார்.

1975 ஆம் ஆண்டு அமெரிக்க மற்றும் கனேடிய சுற்றுலா பயணிகள் இருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் 2003 ஆம் ஆண்டு நேபாளம் – காத்மாண்டுவில்  மீண்டும்  கைதுசெய்யப்பட்ட அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சோப்ராஜ் தன்னை விட 44 வயது இளையவரும் அவரது நேபாள சட்டத்தரணியின் மகளுமான நிஹிதா பிஸ்வாஸை,  2008 ஆம் ஆண்டு சிறையில் திருமணம் செய்துகொண்டார்.

மாறுவேடமிட்டு பல சிறைகளில் இருந்து தப்பிக்கும் திறனுக்காக “The Serpent”  ,  “Bikini Killer” என்று அவர் அறியப்பட்டார்.

சோப்ராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘தி சேர்ப்பன்ட்’ (The Serpent) என்ற பெயரில் 2020 இல் நெட்ப்ளிக்ஸில் இணைய தொடர் ஒன்று வெளியானமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -