சீனாவின் ஜியாங்சு (Jiangsu) மாகாணத்தில், கணவர் தனது மனைவியை பாசமாக இறுக்கமாகக் கட்டியணைத்ததில், மனைவியின் 5 விலா எலும்புகள் முறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஒக்டோபர் 18 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மனைவி குளிராக இருப்பதாகக் கூறியதால், கணவர் அவரை அன்பாகக் கட்டியணைத்து லேசாகத் தூக்கினார். அப்போது ஏற்பட்ட அதிக இறுக்கத்தால் மனைவி திடீரென வலியால் கீழே சரிந்து அமர்ந்தார்.
மருத்துவமனையில் நடத்தப்பட்ட CT ஸ்கேனில், அவருக்கு 5 விலா எலும்புகளில் முறிவும், மற்றொரு எலும்பில் விரிசலும் இருப்பது தெரியவந்தது.
அவருக்கு கடுமையான ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis – எலும்பு அடர்த்தி குறைபாடு) இருந்தது மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. அவர் கடுமையான டயட் (Diets) மேற்கொள்வது, இரவு உணவைத் தவிர்ப்பது, காபி அதிகம் குடிப்பது மற்றும் சூரிய ஒளியில் அதிகம் செல்லாமல் இருந்தது இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது.
அவருக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்று மருத்துவர்கள் கூறி, மருந்து கொடுத்து வீட்டிற்கு அனுப்பினர். அவர் தற்போது ஓய்வில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.










