கொழும்பு நகரில் காசநோய் (TB) பரவுவதற்கு அதிக மக்கள் செறிவு முக்கிய காரணியாக இருந்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் எழுப்பிய வாய்மூலக் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், 2025ஆம் ஆண்டில் கொழும்பு நகரில் 968 காசநோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைவான எண்ணிக்கையாகும்.
அமைச்சர் சமர்ப்பித்த புள்ளிவிபரங்களின்படி, 2019ஆம் ஆண்டில் கொழும்பு நகரில் 871 காசநோயாளர்கள் பதிவாகியிருந்தனர். இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 736 ஆகக் குறைந்ததுடன், 2021ஆம் ஆண்டில் 796 ஆக அதிகரித்தது. தொடர்ந்து 2022ஆம் ஆண்டில் 1,093 ஆகவும், 2023ஆம் ஆண்டில் 1,130 ஆகவும் உயர்ந்தது. 2019 முதல் 2025 வரையான காலப்பகுதியில் பதிவான அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.
எனினும், 2024ஆம் ஆண்டில் காசநோயாளர்களின் எண்ணிக்கை 1,064 ஆகக் குறைந்ததுடன், 2025ஆம் ஆண்டில் மேலும் குறைந்து 968 ஆகப் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டில் 2,264 காசநோயாளர்கள் பதிவாகியிருந்ததாகவும், 2016ஆம் ஆண்டில் 2,156 ஆகவும், 2017ஆம் ஆண்டில் 2,051 ஆகவும், 2018ஆம் ஆண்டில் 2,088 ஆகவும் பதிவாகியதாக அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் பதிவாகும் மொத்த காசநோயாளர்களில் 25 சதவீதமானவர்கள் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வசிப்பவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காசநோயால் பாதிக்கப்பட்ட சிலர் முறையான மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளத் தவறுவதும் நோய் தொடர்ந்து பரவுவதற்குக் காரணமாக அமைவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனினும், காசநோயாளர்களுக்கு இலவச மருந்துகள் மற்றும் உரிய மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும், நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நடமாடும் மருத்துவச் சேவைகள் மற்றும் எக்ஸ்-ரே பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டிலிருந்து கொழும்பு நகரில் காசநோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் போக்குக் காணப்படுவதாகவும், 2025ஆம் ஆண்டிலும் இந்த வீழ்ச்சி தொடர்ந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.










