சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க இராஜதந்திரப் பணியகங்களில் பணியாற்றும் அதிகாரிகளையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், வளைகுடா பிராந்தியத்தின் ஏனைய சில அமெரிக்க இராஜதந்திரப் பணியகங்களில் உள்ள அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களையும் வெளியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
யேமனில் இயங்கும் ஈரான் ஆதரவு ஹூதி படைகளின் தாக்குதல்களில் சவூதி அரேபியாவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தம்மாம் நகரிலுள்ள மன்னர் பஹத் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், எண்மர் காயமடைந்துள்ளனர். மேலும், சவுதி அராம்கோவின் ஷைபா எண்ணெய் வயல் பகுதியில் உள்ள நிலையொன்றைக் குறிவைத்து வந்த ஆளில்லா விமானத்தை சவூதி வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்தபோது ஏற்பட்ட சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சவூதி அரேபியாவில் அவசரகாலப் பணிகளில் ஈடுபடாத அமெரிக்க அரசாங்க ஊழியர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் மட்டுமே வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் டொமி பிகொட், சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இலக்குகள் மீதான ஹூதி படைகளின் தாக்குதல்களைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் நடவடிக்கைகளை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, ஈரான் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியிருந்தது. இதனையடுத்து, முன்னதாகப் பிராந்தியத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த சில அமெரிக்க இராஜதந்திர அதிகாரிகள் கடந்த சில மாதங்களில் மீண்டும் அங்கு அனுப்பப்பட்டிருந்தனர். எனினும், தற்போது அதிகரித்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் மீண்டும் வெளியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஈரானின் ஆதரவைப் பெறும் ஹூதி படைகள், சவூதி அரேபியாவுக்கு எதிரான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், பொதுமக்கள் விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களால் உயிரிழப்புகளும் பயணச் சேவைகளில் கடுமையான இடையூறுகளும் ஏற்பட்டுள்ளதாகவும் பிகொட் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வளைகுடாவின் ஏனைய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராஜதந்திரப் பணியகங்களிலிருந்தும் குடும்ப உறுப்பினர்களை வெளியேறுமாறு உத்தரவிடப்படவுள்ளதாக நான்கு அமெரிக்க அதிகாரிகள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். எனினும், சவூதி அரேபியாவுக்கு வெளியேயுள்ள பணியகங்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விரிவாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.
ஈரான் மீதான அமெரிக்க–இஸ்ரேலியப் போரால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியத்தில், யேமனில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளமை புதியதொரு போர்முனையை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பரந்த பிராந்திய மோதல் உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தையும் பாதித்துள்ளதுடன், வளைகுடா நாடுகளின் பொருளாதாரங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஒக்டோபர் 21ஆம் திகதி புதன்கிழமை ரியாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகம், சவூதி அரேபியா மீது ஹூதி படைகள் மேலும் தாக்குதல்களை நடத்தக்கூடும் என எச்சரித்து பாதுகாப்பு அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது. மார்ச் மாத ஆரம்பத்திலும் ஈரான் பிராந்தியம் முழுவதும் தாக்குதல்களை ஆரம்பித்திருந்த நிலையில், ரியாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அங்கு அமைந்துள்ள மத்திய புலனாய்வு முகவரகத்தின் (CIA) அலுவலகம் ஆகியவை ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.










