ஓய்வுபெற்ற பெண் ஆசிரியர் ஒருவரையும் அவரது மகனையும் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து, உடல் மற்றும் உள ரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிரிந்த புஹுல்வெல்ல பிரதேச சபையின் தலைவரும் மேலும் நான்கு பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) கட்டுப்பாட்டிலுள்ள குறித்த பிரதேச சபையின் தலைவரும், பிரதேச சபை அதிகாரிகள் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களும் நேற்று வியாழக்கிழமை திஹகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஓய்வுபெற்ற ஆசிரியை மற்றும் பொறியியலாளரான அவரது மகன் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கிரிந்த பகுதியில் வடிகவத்த வீதியோரமாகச் சுவர் ஒன்றை நிர்மாணித்தமை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அயல் காணியில் வசிக்கும் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் நிர்மாணித்த சுவரின் ஒரு பகுதி, பொறியியலாளரான மகன் தனது வீட்டிலிருந்து வாகனத்தை வெளியே கொண்டு செல்வதற்குத் தடையாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து, குறித்த நிர்மாணத்தின் சட்டபூர்வத்தன்மை குறித்து ஆராய்வதற்கும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான அறிக்கையொன்றைத் தயாரிப்பதற்கும் ஓய்வுபெற்ற ஆசிரியையையும் அவரது மகனையும் பிரதேச சபை அலுவலகத்துக்கு வருமாறு தலைவர் அழைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவர்கள் இருவரும் பிரதேச சபை அலுவலகத்திலுள்ள அறையொன்றில் தடுத்து வைக்கப்பட்டு, உடல் மற்றும் உள ரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் திஹகொட பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
சட்ட மற்றும் அரசியல் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஐவர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், சந்தேகநபர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருதரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதவான், ஐவரையும் சொந்தப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.










