இலங்கையில் வெறிநாய்க்கடி நோயை ஒழிப்பதையும் நாய்களைப் பதிவு செய்வதையும் நோக்கமாகக் கொண்ட சட்டமூலத்துக்கு, சில சரத்துகளில் திருத்தங்களை மேற்கொள்ளும் நிபந்தனையுடன் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக்க தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் குறித்த சட்டமூலம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்துதல், அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வணிக நோக்கிலான நாய்கள் இனப்பெருக்க நிலையங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றின் ஊடாக இலங்கையில் வெறிநாய்க்கடி நோயை முற்றாக ஒழிப்பதே இச்சட்டமூலத்தின் பிரதான நோக்கமாகும்.
மேலும், நாய்களை முறையாகப் பதிவு செய்தல், வெறிநாய்க்கடி நோய் ஒழிப்புக்காக தேசிய மற்றும் பிராந்திய ஆலோசனைக் குழுக்களை நிறுவுதல் ஆகியவற்றுக்கும் இச்சட்டமூலம் வழிவகுக்கிறது. இதனூடாக தற்போது நடைமுறையிலுள்ள வெறிநாய்க்கடி நோய் கட்டளைச் சட்டம் மற்றும் நாய்கள் பதிவுக் கட்டளைச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாகப் புதிய சட்டக் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
குழுவின் கலந்துரையாடலின்போது, நாய்களுக்கு முதலாவது வெறிநாய்க்கடி தடுப்பூசியை எந்த வயதில் செலுத்த வேண்டும் என்பதைச் சட்டமூலத்தில் தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
அதேவேளை, தெருநாய்களுக்கு உணவளித்தல், அவற்றைப் பராமரித்தல் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் தன்னார்வமாக ஈடுபடும் நபர்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. தெருநாய்களுக்கு உதவுவதன் காரணமாக மாத்திரம் அவர்களை அந்த நாய்களின் சட்டபூர்வ உரிமையாளர்களாகக் கருதுவதையோ அல்லது நாய் உரிமையாளர்களுக்குப் பொருந்தும் அனைத்து சட்டபூர்வ பொறுப்புகளையும் அவர்கள் மீது சுமத்துவதையோ தவிர்க்கும் வகையில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டது.
மேலும், நாய்களுக்கான கருத்தடைச் சிகிச்சைகள் கால்நடை மருத்துவர்களின் மேற்பார்வையில் சத்திரசிகிச்சை முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குழு வலியுறுத்தியது. ஹோர்மோன் ஊசிகள் உள்ளிட்ட மாற்று முறைகளைப் பயன்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கவலைகள் முன்வைக்கப்பட்டன.
நாய்களைப் பதிவு செய்யத் தவறுவோருக்கான அபராதங்களைத் திருத்தியமைத்தல், வணிக நோக்கிலான நாய்கள் இனப்பெருக்க நிலையங்களுக்கான கட்டுப்பாடுகளை வலுப்படுத்துதல் மற்றும் விலங்குகள் மீதான கொடுமைகளைத் தடுப்பதற்குக் கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துதல் ஆகிய முன்மொழிவுகளும் கலந்துரையாடப்பட்டன.
வெறிநாய்க்கடி நோய் தொற்றியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நாய்களைக் கையாளும்போது உரிய கால்நடை மருத்துவ நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் குழு சுட்டிக்காட்டியது.
இறுதியாக, வெறிநாய்க்கடி நோய் ஒழிப்புக்கான தேசிய மற்றும் பிராந்திய ஆலோசனைக் குழுக்களை நிறுவுதல், அவற்றின் பொறுப்புகளை வரையறுத்தல் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டன.










