நெதர்லாந்துடன் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், அந்நாட்டிலிருந்து மேலும் ஆறு வரலாற்று கலைப்பொருட்களை மீளப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
கலாசார மரபுரிமைகளை மீள ஒப்படைக்கும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நெதர்லாந்து இராச்சியத்தின் தேசிய தின வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், 2023 டிசெம்பர் மாதம் நெதர்லாந்தின் ரிஜ்க்ஸ்மியூசியத்திலிருந்து (Rijksmuseum) ஆறு வரலாற்று கலைப்பொருட்களை இலங்கை மீளப் பெற்றிருந்தது. அவற்றின் பூர்வீகம் தொடர்பாக இரு தரப்பினரும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளைத் தொடர்ந்து இந்தக் கலைப்பொருட்கள் மீள ஒப்படைக்கப்பட்டன.
மீள ஒப்படைக்கப்பட்ட பொருட்களில் தங்கக் கஸ்தானா வாள், வெள்ளிக் கஸ்தானா வாள், தங்கக் கத்தி, இரண்டு மகத்துவக்கு எனப்படும் சுவர்த் துப்பாக்கிகள் மற்றும் லெவ்கே திசாவையின் பீரங்கி ஆகியவை அடங்குகின்றன. கண்டி இராச்சியத்தைச் சேர்ந்த இக்கலைப்பொருட்கள் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் எடுத்துச் செல்லப்பட்டவையாகும். இவை இலங்கையின் வரலாறு மற்றும் கலாசார மரபுரிமையில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
இக்கலைப்பொருட்களை மீளப் பெற்றுக்கொள்வது, பரஸ்பர மரியாதை, நல்லிணக்கம் மற்றும் கலாசார மரபுரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் இரு நாடுகளும் கொண்டுள்ள பொதுவான அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத் தொடர்புகள் குறித்தும் அவர் இதன்போது கருத்துத் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டில் இலங்கைக்கு 23,62,521 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாகவும், இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15.1 சதவீத அதிகரிப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சுற்றுலாப் பயணிகளை வழங்கும் நாடுகளின் பட்டியலில் நெதர்லாந்து ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், அந்த ஆண்டில் 64,164 நெதர்லாந்து நாட்டுப் பிரஜைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான உறவுகள் நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டிருந்தாலும், உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் 1951ஆம் ஆண்டிலேயே ஏற்படுத்தப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். கடந்த 75 ஆண்டுகளில் வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி, கல்வி, சுற்றுலா, கலாசாரம் மற்றும் கடல்சார் விவகாரங்கள் உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளது.
எதிர்கால ஒத்துழைப்புக்கான முக்கிய துறைகளாக நிலைபேறான கடல்சார் அபிவிருத்தி, கடல் நிர்வாகம், கடல்சார் பாதுகாப்பு, துறைமுக அபிவிருத்தி மற்றும் நீலப் பொருளாதாரம் ஆகியவற்றையும் அவர் அடையாளப்படுத்தியுள்ளார்.
விவசாயம், மீன்பிடி, கிராமிய அபிவிருத்தி, நீர் விநியோகம், சுகாதாரம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளிலும் நெதர்லாந்து இலங்கைக்கு ஆதரவளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2025–2028 காலப்பகுதிக்கான நெதர்லாந்தின் சர்வதேச கலாசாரக் கொள்கையின் கீழ், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளமை இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
2025 ஒக்டோபரில் ஹேக் நகரில் நடைபெற்ற இரண்டாவது சுற்று அரசியல் ஆலோசனைகள் மற்றும் இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்கள், இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான முக்கிய நடவடிக்கைகளாக அமைந்ததாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான 75 ஆண்டுகால இராஜதந்திர உறவுகள் கொண்டாடப்படும் இவ்வேளையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பங்காண்மையை வலுப்படுத்தவும், புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராயவும் இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படும் என அனில் ஜயந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.










