இணையவழி பயண முன்பதிவுத் தளமான Booking.com, போலியான ஹோட்டல் பட்டியல்கள், இணையவழி மோசடிகள் மற்றும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களிலிருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கப் போதிய நடவடிக்கைகளை எடுக்கிறதா என்பது குறித்து ஐரோப்பிய ஆணைக்குழு உத்தியோகபூர்வ விசாரணையை ஆரம்பித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி அறிவிக்கப்பட்ட இந்த விசாரணையில், இணையவழி மோசடிகளுடன் தொடர்புடைய அபாயங்களைக் கண்டறிந்து அவற்றைக் கட்டுப்படுத்துவதில் நிறுவனம் போதிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதா என்பதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை (Digital Services Act – DSA) மீறியுள்ளதா என்பதும் ஆராயப்படவுள்ளது.
போலியான தங்குமிடப் பட்டியல்கள், வாடிக்கையாளர்களின் முன்பதிவு விவரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இணையவழி ஏமாற்று நடவடிக்கைகள் மற்றும் பணம் செலுத்தி தேடல் முடிவுகளில் முன்னுரிமை பெறும் ஹோட்டல்கள் விளம்பரங்கள் எனத் தெளிவாக அடையாளப்படுத்தப்படுகின்றனவா என்பன உள்ளிட்ட மூன்று முக்கிய விடயங்கள் குறித்து விசாரணை கவனம் செலுத்தவுள்ளது.
Booking.com தளத்தின் செய்திப் பரிமாற்ற வசதிகளையும் வாடிக்கையாளர்களின் தகவல்களையும் மோசடிக்காரர்கள் பயன்படுத்தி, தங்குமிடங்களை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளைப் போன்று நடித்து, வாடிக்கையாளர்களிடம் மோசடியான முறையில் பணம் கோருகின்றனரா என்பதையும் அதிகாரிகள் ஆராயவுள்ளனர்.
அத்துடன், அதிக தரகுக் கட்டணம் செலுத்தும் ஹோட்டல்கள் தேடல் முடிவுகளில் உயர்ந்த இடங்களைப் பெறும்போது, அவை கட்டண அனுசரணையுடனான பட்டியல்கள் என்பதை வாடிக்கையாளர்களுக்குத் தெளிவாகக் காண்பிக்கிறதா என்பதும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
“மோசடிக்கு உள்ளாகிவிடுவோம் என்ற அச்சமின்றி ஐரோப்பியர்கள் தங்களது விடுமுறைகளை முன்பதிவு செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்” என ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்நுட்பப் பிரிவுக்குப் பொறுப்பான ஆணையாளர் ஹென்னா விர்க்குனென் தெரிவித்துள்ளார்.
இத்தகைய அபாயங்களைக் கையாள்வதற்கான தெளிவான பொறுப்புகளை இணையவழித் தளங்களுக்கு டிஜிட்டல் சேவைகள் சட்டம் விதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாக Booking.com நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாத்தல் ஆகியவை தமது முக்கிய முன்னுரிமைகளில் அடங்குவதாகவும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளின் கீழ், டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை மீறியதாகக் கண்டறியப்படும் நிறுவனங்களுக்கு அவற்றின் உலகளாவிய வருடாந்த வருவாயில் ஆறு சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விசாரணைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும், உத்தியோகபூர்வ விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை மட்டும், Booking.com நிறுவனம் தவறிழைத்துள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்பதைக் குறிக்காது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
Booking.com targeted in EU investigation into phishing scams, fraudulent listings










