அரச சுகாதார நிறுவனங்களில் நீர் மற்றும் மின்சாரத்தை வினைத்திறனுடன் பயன்படுத்துவதுடன், நோயாளிகளுக்கான சிகிச்சைச் சேவைகள் பாதிக்கப்படாமல் வீண்விரயத்தைக் குறைக்கும் நோக்கில் புதிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நீர் மற்றும் மின்சாரப் பயன்பாட்டைக் கண்காணித்தல், தரவுகளை முறையாகப் பதிவுசெய்து அறிக்கையிடுதல், பயன்பாட்டுக் கட்டமைப்புகளைச் சரியான முறையில் பராமரித்தல் மற்றும் வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதில் ஊழியர்களின் பங்களிப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு இந்த வழிகாட்டல்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன.
குறிப்பாக, சத்திரசிகிச்சைக் கூடங்கள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், ஆய்வுகூடங்கள் மற்றும் சுகாதார வசதிகள் போன்ற இடங்களில் தடையற்ற சேவைகளைப் பேண வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு இந்த வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் தேவையற்ற நீர் மற்றும் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கவும், அரச நிதியை வினைத்திறனுடன் பயன்படுத்தவும், சுகாதாரச் சேவைகளின் நிலைத்தன்மையை வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒக்டோபர் 22ஆம் திகதி உலக எரிசக்தி தினம் அனுஷ்டிக்கப்பட்டதை முன்னிட்டு, கடந்த புதன்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனியின் தலைமையில் இந்த வழிகாட்டல்கள் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சின் திட்டமிடல் பிரிவின் நிறுவன அபிவிருத்திப் பிரிவுப் பணிப்பாளரும் ஆலோசகர் வைத்தியருமான உபுலி விஜேமான்ன, நேற்று வியாழக்கிழமை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் வழிகாட்டல்களைச் சமர்ப்பித்தார்.
பொதுமக்களுக்கு தரமான சுகாதாரச் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குவதை உறுதிப்படுத்தியவாறு, நாடளாவிய ரீதியிலுள்ள அரச சுகாதார நிறுவனங்களில் வள முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.










