விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உருக்கமான கடிதமொன்றை எழுதியுள்ளார். 2010ஆம் ஆண்டு நாமல் முதன்முதலில் அரசியலில் பிரவேசிக்கத் தீர்மானித்தபோது அவருக்கு வழங்கிய அறிவுரைகளையும் அவர் அக்கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.
நாமல் அரசியலில் நுழைவதற்குத் தனது அனுமதியைக் கோரியதாகக் குறிப்பிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, அப்போது சிறை வாழ்க்கையையும் பல்வேறு துன்பங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் எனத் தான் அறிவுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். “நீ அரசியலில் நுழைய விரும்பினால் நுழையலாம். ஆனால், சிறைக்குச் செல்லவும் துன்பங்களை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்” எனத் தான் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில், நாமல் பிறப்பதற்கு முன்னர், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் சிறையில் அடைக்கப்பட்ட அனுபவத்திலிருந்தே இந்த அறிவுரையை வழங்கியதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது சிறைவாசத்தின்போது நீதித்துறை மீதான நம்பிக்கையே தனக்கு ஒரே ஆறுதலாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், “யார் என்ன கூறினாலும், நீதித்துறை மீது மட்டுமே நம்பிக்கை வையுங்கள்” என மகனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தானும் தனது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் தற்போது கொழும்பு நவலோகா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நாமல் பிறந்ததும் இதே வைத்தியசாலையில்தான் எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தாம் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இளைய மகன்களான யோஷித மற்றும் ரோஹித ஆகியோர் தங்களைக் கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்துக் குறிப்பிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, அவருக்கு எதிரான வழக்குகளில் ஒன்று அவர் கடற்படையில் இணைந்துகொண்ட முடிவுடன் தொடர்புடையது எனக் கூறியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தாலும் அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் நாமல் ஈடுபடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“பெற்றோர் செய்யும் செயல்களுக்குப் பிள்ளைகள் பொறுப்பல்ல. பழிவாங்காமல் இருப்பதே ராஜபக்ஷ குடும்பத்தின் வழியும் பாரம்பரியமும் ஆகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தமது குடும்பம் பங்களிப்பு செய்திருந்தபோதிலும், தமது குடும்பத்தினர் நியாயமற்ற முறையில் குற்றஞ்சாட்டப்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்திருந்தாலும், இலங்கை மக்கள் நன்றியுணர்வு கொண்டவர்கள் என்ற நம்பிக்கையை நாமல் தொடர்ந்து பேண வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கடிதத்தின் இறுதியில் மகனுக்கு பௌத்த மத ஆசீர்வாதத்தையும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கிரிஷ் (Krrish) பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் நாமல் ராஜபக்ஷ தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கில் அவருக்கும் கிரிஷ் குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவுக்கும் பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்ததையடுத்து, இருவரும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.










