ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) செல்லப்பிராணிகள் மற்றும் பண்ணை விலங்குகளுக்கு வழங்கப்படும், பொதுவான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தான சிப்ரோஃப்ளோக்சசின் (Ciprofloxacin) மருந்தின் கால்நடை மருத்துவப் பயன்பாட்டுக்கு எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் தடை விதிக்கப்படவுள்ளது.
எமிரேட்ஸ் மருந்து நிறுவனம் (Emirates Drug Establishment – EDE) இந்தத் தடையை அறிவித்துள்ளதுடன், குறித்த மருந்தைக் கொண்ட கால்நடை மருத்துவ மருந்துகள் மற்றும் மூலப்பொருட்களுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.
இந்தத் தடையால் ஒன்பது மருந்துப் பொருட்கள் பாதிக்கப்படவுள்ளன. அவற்றில் எட்டு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுபவை என்பதுடன், மற்றையது உள்நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமொன்றுடன் தொடர்புடையதாகும்.
சிப்ரோஃப்ளோக்சசின் மருந்தை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், காலக்கெடுவுக்கு முன்னர் ஏற்கனவே உள்ள கையிருப்புகளை அகற்றுமாறும் கோரப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள மருந்துகளை மீண்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளின் கீழ் அழிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் தடை மருந்தை இறக்குமதி செய்யும் அல்லது உற்பத்தி செய்யும் நிறுவனங்களை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்டு தனிப்பட்ட பயணப் பொதிகளில் கொண்டுவரப்படும் செல்லப்பிராணிகளுக்கான மருந்துகளுக்கும் இது பொருந்துமா என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
அதேவேளை, மனிதர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் சிப்ரோஃப்ளோக்சசின் மருந்து, எமிரேட்ஸ் மருந்து நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளின் பட்டியலில் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சிய பயணத்தின்போது எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் மருந்துகள் எவை?
எமிரேட்ஸ், எதிஹாட் மற்றும் ஏர் அரேபியா போன்ற விமான நிறுவனங்கள், விமானங்களில் எடுத்துச் செல்லத் தடை செய்யப்பட்ட மருந்துகளுக்கெனத் தனியான விரிவான பட்டியலை வெளியிடவில்லை. எனினும், தடைசெய்யப்பட்ட மற்றும் ஆபத்தான பொருட்கள் தொடர்பான விதிமுறைகளைத் தமது இணையத்தளங்களில் வெளியிட்டுள்ளன. மருந்துகள் தொடர்பான இறுதி வழிகாட்டல்களுக்கு, மருந்து ஒழுங்குபடுத்தும் அதிகார அமைப்பின் விதிமுறைகளும் முக்கியமானவை.
2022 செப்டம்பர் 15ஆம் திகதியிட்ட எமிரேட்ஸ் மருந்து நிறுவனம் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளின் பட்டியலில் சுமார் 268 மருந்துகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய சிலவற்றை மருத்துவப் பரிந்துரை அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்.
முற்றாகத் தடைசெய்யப்பட்ட மருந்துகள்
ஹெரோயின், கொக்கெய்ன், கஞ்சாச் செடி மற்றும் அதன் பிசின், THC, செயற்கைக் கன்னாபினாய்டுகள், LSD, MDMA, மெஸ்கலின், காத் (Khat), சைலோசைபின் காளான்கள், பியோட்டி மற்றும் அபின் செடி ஆகியவை தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
யோஹிம்பே மரப்பட்டை மற்றும் 3-மெத்தில் ஃபெண்டானில் உள்ளிட்ட சில வகையான ஃபெண்டானில் மருந்துகளும் இந்தப் பட்டியலில் அடங்குகின்றன.
மருத்துவப் பரிந்துரையுடன் எடுத்துச் செல்லக்கூடிய மருந்துகள்
சில கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளை, பயணத்தின் காலப்பகுதிக்குத் தேவையான அளவு அல்லது மூன்று மாதங்களுக்கான பயன்பாட்டு அளவு ஆகியவற்றில் எது குறைவானதோ அந்த அளவுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படலாம். கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளை எடுத்துச் செல்லும் பயணிகள், பயணத்திற்கு முன்னர் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக அனுமதி பெற வேண்டியிருக்கலாம் என எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட மருந்துகளில் பின்வருவன அடங்குகின்றன:
- வலி நிவாரணத்துக்கான ஓபியோயிட் மருந்துகள்: கோடீன், டிரமடோல், மோர்ஃபின், ஒக்ஸிகோடோன், ஹைட்ரோகோடோன், மெதடோன், ஃபெண்டானில், பெத்திடின்.
- பதற்றத்தைக் குறைக்கும் மருந்துகள் மற்றும் மயக்க மருந்துகள்: டயஸெபாம் (Valium), அல்பிரசோலாம் (Xanax), குளோனசெபாம், லோரசெபாம், மிடாசோலாம், டெமாசெபாம்.
- தூக்கத்துக்கான மருந்துகள்: சோல்பிடெம், சோபிக்ளோன், சலெப்லோன்.
- நரம்பு வலி மற்றும் வலிப்பு நோய்களுக்கான மருந்துகள்: பிரிகாபலின், கபாபென்டின், ஃபெனோபார்பிட்டல்.
- கவனக்குறைவு மற்றும் மிகைச் செயற்பாட்டுக் கோளாறு (ADHD) மற்றும் தூண்டுதல் மருந்துகள்: மெதில்ஃபெனிடேட், அம்பெட்டமைன், டெக்ஸ்அம்பெட்டமைன், லிஸ்டெக்ஸ்அம்பெட்டமைன்.
- ஏனைய மருந்துகள்: சூடோஎபெட்ரின், எபெட்ரின், ஃபென்டர்மின், புப்ரெனோர்ஃபின், கெட்டமின்.
முன் அனுமதியின்றி எடுத்துச் செல்லக்கூடிய மருந்துகள்
எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் தகவலின்படி, மருத்துவச் சீட்டு இன்றி வாங்கக்கூடிய பொதுவான மருந்துகள் மற்றும் கட்டுப்படுத்தப்படாத பரிந்துரை மருந்துகளுக்கு முன் அனுமதி தேவையில்லை.
பராசிட்டமோல், இபுபுரோஃபென், ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள், இன்சுலின், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் மற்றும் சிப்ரோஃப்ளோக்சசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் எமிரேட்ஸ் மருந்து நிறுவனம் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துப் பட்டியலில் இடம்பெறவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், பயணிகள் இம்மருந்துகளை அவற்றின் அசல் பொதிகளில் எடுத்துச் செல்வதுடன், பாதுகாப்புக்காக மருத்துவப் பரிந்துரையையும் வைத்திருப்பது சிறந்தது.
எதிஹாட் விமான நிறுவனமும் பரிந்துரை மருந்துகள் மற்றும் பரிந்துரையின்றி வாங்கக்கூடிய மருந்துகளுக்கு விலக்களிப்புகளை வழங்குகிறது. விமானப் பயணத்தின்போது தேவையான மருத்துவப் பொருட்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவிலிருந்து புறப்படும் விமானங்களில் தூள் வடிவிலான பொருட்களுக்கு சில வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை எடுத்துச் செல்வதற்கான ஆதார ஆவணங்களும் தேவைப்படலாம். அமெரிக்காவிலிருந்து புறப்படும் விமானங்களில் மருத்துவப் பரிந்துரையுடன் கூடிய, முத்திரையிடப்பட்ட தூள் மருந்துகளுக்கு இதேபோன்ற விலக்களிப்புகள் உள்ளன.
ஏர் அரேபியா விமானத்தில், தனிப்பட்ட பயன்பாட்டுக்கான பாதரச மருத்துவ வெப்பமானியைப் பாதுகாப்புப் பெட்டியில் வைத்து, பயணப்பொதியில் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. ஒக்சிஜன் சிலிண்டர்களைப் பொறுத்தவரை, விமான நிறுவனத்தின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சிலிண்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
பயணிகள் கவனிக்க வேண்டியவை
மருந்துகளை எடுத்துச் செல்வதற்கு முன்னர், பெட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தகப் பெயரை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், அந்த மருந்தின் செயற்பாட்டு மூலப்பொருளின் பெயரைச் சரிபார்க்க வேண்டும். ஏனெனில், எமிரேட்ஸ் மருந்து நிறுவன பட்டியல் மருந்துகளின் செயற்பாட்டு மூலப்பொருட்களின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரு மருந்து தொடர்பில் சந்தேகம் இருந்தால், பயணத்திற்கு முன்னர் அருகிலுள்ள ஐக்கிய அரபு இராச்சியத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிறுவனத்துடன் தொடர்புகொண்டு, குறிப்பிட்ட மருந்தை விமான அறைக்குள் எடுத்துச் செல்லலாமா அல்லது பொதியில் வைக்க வேண்டுமா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
மேலும், மருத்துவப் பரிந்துரைகள் மற்றும் மருந்துகளின் அசல் பொதிகளை உடன் எடுத்துச் செல்வதுடன், கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளுக்கு முன் அனுமதி பெற வேண்டியிருந்தால் அதற்குப் போதிய கால அவகாசத்தையும் ஒதுக்க வேண்டும்.
மூலம் : கல்ஃப் நியூஸ் (Gulf News)










