PHP நிரலாக்க மொழியில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு தீவிரமான பாதுகாப்புக் குறைபாடுகளைச் சரிசெய்வதற்காக அவசர மென்பொருள் புதுப்பிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், உலகெங்கிலும் உள்ள அரச மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தமது இணையத்தளங்களைத் தற்காலிகமாக முடக்கியுள்ளன.
இணையத்தளங்களை உருவாக்குவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் PHP நிரலாக்க மொழியின் உருவாக்குநர்கள், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட இரண்டு முக்கியமான பாதுகாப்புக் குறைபாடுகளைச் சரிசெய்யும் புதிய புதுப்பிப்புகளை நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து, பாதிக்கப்படக்கூடிய மென்பொருள்களை உடனடியாகப் புதுப்பிக்குமாறு பயனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Cloudflare என்ற இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் தகவலின்படி, உலகளாவிய இணையத்தளங்களில் சுமார் 70 சதவீதமானவை PHP தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. WordPress மற்றும் Magento போன்ற பிரபலமான இணையத்தளத் தளங்களும் இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குகின்றன. இதனால், குறித்த பாதுகாப்புக் குறைபாடு உலகளாவிய இணையப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இந்த இரண்டு பாதுகாப்புக் குறைபாடுகளும் CVSS v4.0 பாதுகாப்புத் தீவிரத்தன்மை அளவுகோலில் 10 புள்ளிகளில் 9.2 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இதன் மூலம், பாதிக்கப்பட்ட கணினி அமைப்புகளில் உள்நுழையாமலேயே இணையவழித் தாக்குதலாளர்கள் தீங்கிழைக்கும் நிரல்களைச் செயற்படுத்தக்கூடிய ஆபத்து இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கணினி அவசரகாலப் பதிலளிப்புக் குழு (CERT-EU) எச்சரித்துள்ளது.
பாதுகாப்புப் புதுப்பிப்புகளை உடனடியாகச் செயற்படுத்த முடியாத நிறுவனங்கள், தமது இணையத்தளங்களைத் தற்காலிகமாக முடக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளின் இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பல நாடுகளின் அரச இணையத்தளங்கள் பாதிப்பு
பிரான்ஸ் உள்துறை அமைச்சு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனது இணையத்தளங்கள் அனைத்தையும் பராமரிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், பிரான்ஸ் அரச இணையத்தளங்களை அணுகிய பயனர்களுக்கு பராமரிப்புப் பணிகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
நெதர்லாந்திலும் பல நிறுவனங்கள் பொதுமக்கள் அணுகக்கூடிய இணையத்தளங்களைத் தற்காலிகமாக முடக்கியுள்ளன. டென்மார்க்கில் நகராட்சி தகவல் தொழில்நுட்பச் சேவைகளை வழங்கும் Kombit நிறுவனம், தேசியப் பாடசாலைத் தொடர்பாடல் தளம் உள்ளிட்ட பல சேவைகளை நிறுத்தியுள்ளது.
செக் குடியரசு அரசாங்கம் புதன்கிழமை மாலை தனது இணையத்தளத்தை முடக்கியதுடன், பின்லாந்திலும் அரச இணையச் சேவைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளன. அந்நாட்டின் அரச தகவல் தொழில்நுட்பச் சேவை வழங்குநரான Valtori இதனைத் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் வரவு செலவுத் திட்டப் பொறுப்புக்கான அலுவலகமும் (OBR), PHP பாதுகாப்புக் குறைபாடுகளைக் கருத்திற்கொண்டு தனது இணையத்தளத்தைத் தற்காலிகமாக முடக்கியுள்ளது. இதேவேளை, ஆக்ஸ்போர்ட்ஷயர் மற்றும் ஹில்லிங்டன் உள்ளூராட்சி சபைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமது இணையத்தளங்களை முடக்கியுள்ளன.
இவற்றில் சில இணையத்தளங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ள போதிலும், பாதிக்கப்பட்ட அமைப்புகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிய உதவிய செயற்கை நுண்ணறிவு
இந்தப் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) முகவர்கள் பங்களித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ChatGPT சேவையை இயக்கும் OpenAI நிறுவனம், கடந்த இரண்டு மாதங்களாக PHP பாதுகாப்புக் குறைபாட்டைச் சரிசெய்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றியதாகக் கூறியுள்ளது. பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உருவாக்குவதில் PHP உருவாக்குநர்களுக்கும் ஆதரவளித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தை அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்புப் பிரச்சினைகளில் ஒன்றாக OpenAI வர்ணித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிய உதவக்கூடிய அதேவேளை, இணையத் தாக்குதலாளர்களுக்கும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள உதவக்கூடும் எனவும் நிறுவனம் எச்சரித்துள்ளது.
Netblocks அமைப்பின் பணிப்பாளரும் இணையப் பாதுகாப்பு நிபுணருமான அல்ப் டோக்கர், Sky News தொலைக்காட்சிக்கு வழங்கிய கருத்தில், இந்தப் பாதுகாப்புக் குறைபாடு மிகவும் தீவிரமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
PHP மென்பொருளைப் பயன்படுத்தும் சேவையகங்களை இணையத்தில் உள்ளவர்கள் அணுகுவதற்கான வாய்ப்பை இந்தக் குறைபாடு ஏற்படுத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். இதுவரை தீங்கிழைக்கும் தரப்பினரால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், இனிவரும் காலங்களில் தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பாதுகாப்புக் குறைபாட்டைச் சரிசெய்யும் புதுப்பிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், அதனை ஆய்வு செய்யும் செயற்கை நுண்ணறிவு முகவர்களால் தாக்குதல் முறைகளை மீளுருவாக்குவது முன்னரைவிட எளிதாகலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக நாடுகளுக்கு அவசர எச்சரிக்கை
பாதிக்கப்பட்ட PHP அமைப்புகளை அடையாளம் காணவும், உடனடியாகப் பாதுகாப்புப் புதுப்பிப்புகளைச் செயற்படுத்தவும் பிரித்தானியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் இணையப் பாதுகாப்பு அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.
பிரித்தானிய அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கையில், அரசாங்க அமைப்புகளில் காணப்படக்கூடிய பாதுகாப்பு அபாயங்களை அடையாளம் கண்டு அவற்றைச் சரிசெய்யும் பணிகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் அனைத்தும் தேசிய இணையப் பாதுகாப்பு மையத்தின் (NCSC) வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தமது அமைப்புகளைப் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவரகமும் (NSA), இந்தப் பாதுகாப்புக் குறைபாடுகள் சேவையகங்களின் கோப்புக் கட்டமைப்பு அல்லது தரவுத்தளங்களை நேரடியாக அணுகுவதற்கான வழியை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளது. உடனடியாகப் புதுப்பிக்க முடியாத நிறுவனங்கள், ஆபத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வரை தமது அமைப்புகளை இணையத்திலிருந்து துண்டிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
அவுஸ்திரேலிய இணையப் பாதுகாப்பு மையம் (ACSC), நிறுவனங்கள் தமது கணினி அமைப்புகளில் PHP பயன்பாட்டைக் கண்டறிந்து, பாதுகாப்புப் புதுப்பிப்புகளைச் செயற்படுத்தத் தயாராக இருக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான இணையச் செயற்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவை நிர்வகிக்கும் Wikimedia Foundation நிறுவனமும் PHP பாதுகாப்புக் குறைபாடுகளைச் சரிசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் உடனடியாகப் பாதுகாப்புப் புதுப்பிப்புகளைச் செயற்படுத்தத் தவறினால், இணையத்தள ஊடுருவல்கள் அதிகரிக்கக்கூடும் என்பதால் உலகளாவிய இணையப் பாதுகாப்பு அமைப்புகள் அவசர நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன.










