நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகத்தைத் தடையின்றித் தொடரும் நோக்கில், அடுத்த மூன்று நாட்களில் 3 இலட்சத்து 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிவந்த ‘CORINTHIAN’ கப்பல் நேற்று வியாழக்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ளது. இதனையடுத்து, அதே பிற்பகல் எரிவாயுவை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கப்பல் வருகையின் மூலம் நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்களைத் தடையின்றி விநியோகிக்க முடியும் என லிட்ரோ கேஸ் லங்கா தெரிவித்துள்ளது. இதனால், நுகர்வோர் வழமைபோன்று எரிவாயு சிலிண்டர்களைக் கொள்வனவு செய்ய முடியும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் வழமைபோன்ற மட்டத்தில் பேணப்பட்டு வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
எனவே, எரிவாயு சிலிண்டர்களைத் தேவையின்றிச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு நுகர்வோரிடம் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. எரிவாயு விநியோகம் வழமைபோன்று தொடரும் என்றும் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.










