வாடிக்கையாளர்களின் கணக்குகளிலிருந்து பல பில்லியன் டொலர்கள் திருடப்பட்ட வரலாறு காணாத சைபர் தாக்குதலிலிருந்து மீண்டு வரும் Binance கிரிப்டோ நாணயப் பரிவர்த்தனைத் தளத்திலிருந்து முதலீட்டாளர்கள் சுமார் 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீளப்பெற்றுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சைபர் தாக்குதலில் சுமார் 6.3 பில்லியன் டொலர்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய கொள்ளைச் சம்பவமாகக் குறிப்பிடப்படுவதுடன், இதன் பின்னணியில் வடகொரியா இருப்பதாக நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக Binance நிறுவனம் ஆரம்பத்தில் பணத்தை மீளப்பெறும் நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்தது. எனினும், ஞாயிற்றுக்கிழமை முதல் கட்டங்களாக பணம் மீளப்பெறும் வசதியை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அறிவித்தது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை, இந்தத் தளம் ஊடாக 4.6 பில்லியன் டொலர்கள் மீளப்பெறப்பட்டதுடன், ஒரு பில்லியன் டொலர் வைப்பிலிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 3.6 பில்லியன் டொலர்கள் நிகர வெளியேற்றமாகப் பதிவாகியுள்ளது. இது நிறுவனத்தின் மொத்த நிர்வாகத்தின் கீழுள்ள 171 பில்லியன் டொலர் சொத்துக்களில் 2.1 சதவீதமாகும்.
நிறுவனத்தின் அண்மைய கையிருப்பு உறுதிப்படுத்தல் அறிக்கையிலும் இந்தத் தரவுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. முழுமையான அறிக்கை திங்கட்கிழமை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் பணத்தை மீளப்பெறும் நடவடிக்கைகளில் அதிகரிப்பு காணப்பட்ட போதிலும், தற்போது அதன் அளவு குறைந்து எதிர்பார்த்தபடி நிலைபெற்று வருவதாகவும், வைப்பிலிடப்படும் தொகை தொடர்ந்து கணிசமான அளவில் உள்ளதாகவும் Binance தெரிவித்துள்ளது.
சந்தை நிலைமைகள் சீராக இருப்பதாகவும், எஞ்சியுள்ள வலையமைப்புகள் மற்றும் சொத்துக்களைத் தனது குழுவினர் தீவிரமாகச் சோதித்து வருவதாகவும் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக Ethereum, Ethereum வலையமைப்பிலுள்ள USDT மற்றும் USDC உள்ளிட்ட 15 வலையமைப்புகள் மற்றும் சொத்துக்களுக்கான பண மீளப்பெறல் வசதிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. BNB Smart Chain வலையமைப்பில் உள்ள சில சொத்துக்களும் இதில் அடங்குகின்றன. பின்னர் ஞாயிற்றுக்கிழமை Dogecoin மற்றும் Avalanche நாணயங்களுக்கான பரிவர்த்தனைகளும் அவற்றின் சொந்த வலையமைப்புகளில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
திருடப்பட்ட தொகையில் 90 சதவீதத்தை மீண்டும் ஈடுசெய்துள்ளதாக Binance தெரிவித்துள்ளது. எஞ்சியுள்ள 10 சதவீதத் தொகையைச் சேர்ந்த நாணயங்கள் குறைந்த பணப்புழக்கத்தைக் கொண்டிருப்பதால், அவற்றை மீண்டும் கொள்வனவு செய்வதற்கு அதிக காலம் தேவைப்படலாம் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Binance நிறுவனத்தின் இணை பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் டெங், எஞ்சியுள்ள 10 சதவீதத் தொகையையும் ஈடுசெய்வதற்கு நிறுவனம் உறுதிபூண்டுள்ளதாகவும், இந்தச் சைபர் தாக்குதலால் ஏற்படும் நிதிப் பாதிப்பை வாடிக்கையாளர்கள் சுமக்க வேண்டியிருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்தச் சைபர் தாக்குதலின் பின்னணியில் வடகொரியாவுடன் தொடர்புடைய ‘TraderTraitor’ என்ற குழு இருப்பதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகமான FBI சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தக் குழு, 2014ஆம் ஆண்டு சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் கணினி வலையமைப்பில் ஊடுருவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ‘Lazarus Group’ எனப்படும் குழுவின் ஒரு பகுதியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னை நையாண்டி செய்த ‘The Interview’ திரைப்படத்துக்குப் பழிவாங்கும் நோக்கில் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்போது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதியன்று Binance கிரிப்டோ பரிவர்த்தனைத் தளத்திலிருந்து 6 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான மெய்நிகர் சொத்துக்கள் திருடப்பட்டமைக்குப் பின்னால் வடகொரியா இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக FBI தெரிவித்துள்ளது.
திருடப்பட்ட சொத்துக்களை TraderTraitor குழுவினர் Ethereum நாணயமாக மாற்றி வருவதை அவதானித்துள்ளதாகவும், பின்னர் பரவலாக்கப்பட்ட நிதிச் சேவைகள் மற்றும் உடனடி நாணயப் பரிமாற்றச் சேவைகள் ஊடாக அவற்றை மேலும் பணமோசடி செய்யக்கூடும் என எதிர்பார்ப்பதாகவும் FBI குறிப்பிட்டுள்ளது.
எனவே, இந்தக் குழுவினர் திருடப்பட்ட சொத்துக்களைப் பணமோசடி செய்வதற்குப் பயன்படுத்தும் கணக்கு முகவரிகளுடன் தொடர்புடைய பரிவர்த்தனைகளைத் தடுக்குமாறு தனியார் துறை நிறுவனங்களிடம் FBI கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தச் சைபர் தாக்குதல், ஊடுருவப்பட்ட மடிக்கணினி ஒன்றையும், அதன் செயற்பாடுகள் தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தீங்கிழைக்கும் மென்பொருளையும் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சிக்கலான தாக்குதல் என ரிச்சர்ட் டெங் தெரிவித்துள்ளார். இதனால் தாக்குதலைக் கண்டறிந்து விசாரணை நடத்துவது மேலும் கடினமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வதற்காக சுமார் 6.34 பில்லியன் டொலர் நிறுவன நிதியை ஒதுக்கியுள்ளதாக Binance தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் திருடப்பட்ட நிதியால் ஏற்பட்ட முழுமையான நிதிப் பாதிப்பையும் நிறுவனம் ஈடுசெய்யும் எனவும் அறிவித்துள்ளது.
திருடப்பட்ட நாணயங்களை மீண்டும் கொள்வனவு செய்வதற்கான நிதி, வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு சொத்து நிதி, எதிர்கால ஒப்பந்தங்களுக்கான காப்பீட்டு நிதி மற்றும் நிறுவனத்தின் சொந்த நிதிக் கையிருப்பு ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளதாக Binance தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் அதிகரித்து வரும் திறன்கள், மறையாக்கத் தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்ற கவலைகள் அதிகரித்து வரும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சைபர் தாக்குதல் குறித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து Bitcoin நாணயத்தின் பெறுமதி சுமார் 5 சதவீதமும், Ethereum நாணயத்தின் பெறுமதி சுமார் 6 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன. Binance நிறுவனத்தின் சொந்த நாணயமான BNB இன் பெறுமதியும் சுமார் 10 சதவீதம் சரிவடைந்தது.
அணுவாயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் காரணமாகப் பரந்தளவிலான சர்வதேசத் தடைகளை எதிர்கொண்டுள்ள வடகொரியா, சட்டவிரோத வழிகளில் பெருமளவு வருமானத்தைத் திரட்டும் திறனைக் கொண்டிருப்பது குறித்த கவலைகளையும் இந்தப் பாரிய சைபர் தாக்குதல் மீண்டும் அதிகரித்துள்ளது.










