யாழ்ப்பாணம், அளவெட்டி பகுதியில் மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் சுவருடன் மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் – அளவெட்டி வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மல்லாகம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளில் இருவர் பின்னால் அமர்ந்து பயணித்துள்ளனர். இதன்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோரத்திலிருந்த சுவருடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உள்ளிட்ட மூவரும் படுகாயமடைந்து தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், மோட்டார் சைக்கிள் சாரதியும் பின்னால் அமர்ந்து பயணித்த ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் முறையே 16 மற்றும் 28 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் குண்டுகுளம் மற்றும் அச்சுவேலி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










