இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியத்தைக் கொண்டாடும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘மைத்ரி சேது’ திட்டத்திற்கான அடிக்கல், பியகமவில் அமைந்துள்ள ஸ்ரீ போதித்ருமாராமய புராதன விகாரையில் நாட்டப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சமூக ஊடகப் பதிவொன்றின் மூலம் இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கலாசார மற்றும் மத உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநகாரிக தர்மபால மற்றும் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் நீடித்த மரபுகளையும், பௌத்த பாரம்பரியத்திற்கான அவர்களின் பங்களிப்புகளையும் நினைவுகூரும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளதாக சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, இந்திய ராஜ்யசபா உறுப்பினர் ஜோதி வாக்மாரே மற்றும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல ஆகியோர் கலந்துகொண்டனர்.










