கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வெல்லம்பிட்டிய பகுதியில் காணாமல் போன 24 வயதுடைய இளைஞரின் கொலைச் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, குறித்த இளைஞர் கிராண்ட்பாஸ் பகுதியில் அமைந்துள்ள வாகனத் திருத்துமிடம் ஒன்றில் வைத்து கொலை செய்யப்பட்ட பின்னர், அவரது சடலம் எரிக்கப்பட்டு, எஞ்சிய மனித எச்சங்கள் களனி ஆற்றில் வீசப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞர் காணாமல் போனமை தொடர்பில் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி கம்பிகொடுவவத்தை பகுதியில் அமைந்துள்ள வாகனத் திருத்துமிடத்தில் சிலருடன் இணைந்து குறித்த இளைஞர் மதுபானம் அருந்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் அவர் காணாமல் போனதைத் தொடர்ந்து, அவருடன் இருந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவின் அதிகாரிகளால் மாபொல மற்றும் மஹர ஆகிய பகுதிகளில் வைத்து இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் வைத்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29, 32, 37 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் வெல்லம்பிட்டிய மற்றும் அகலவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின்போது கிடைத்த தகவல்களின்படி, குறித்த இளைஞர் வாகனத் திருத்துமிடத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட பின்னர், அவரது சடலம் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாப்பிலியவல பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் எஞ்சிய மனித எச்சங்கள், கொஸ்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரன்வல பாலத்திலிருந்து களனி ஆற்றில் வீசப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.










