அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாகாணத்தில் வர்த்தகப் பயணிகள் விமானமொன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
விமானத்தில் பயணித்த அனைவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் ஒரு “பயங்கரமான துயரச் சம்பவம்” என அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் சீன் டஃபி, தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விபத்துக்கு முன்னர் விமானத்தின் விமானி அறையில் இடம்பெற்ற உரையாடல்கள் அடங்கிய ஒலிப்பதிவுகள் LiveATC.net இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. அதில், விமானி பனிக்கட்டிப் படிவு தொடர்பான பிரச்சினைகள் கட்டுப்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதாகக் கூறுவதும், பின்னர் விமானம் வேகமாக உயரத்தை இழப்பதாகத் தெரிவிப்பதும் பதிவாகியுள்ளது.
சிறிது நேரத்தின் பின்னர், பதற்றமடைந்த விமானப் பணியாளர்கள், “நாங்கள் தரையில் மோதப் போகிறோம்” எனக் கூறியதும் அந்த ஒலிப்பதிவில் இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம், வர்த்தகப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் பிரபலமான Learjet 60 ரக விமானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாநிலத்தின் ஒஸ்டின் நகரிலிருந்து பஹாமாஸ் நோக்கிப் பயணித்த இந்த விமானம் தனியார் விமானம் என்பதை ஒஸ்டின்-பெர்க்ஸ்ட்ரோம் சர்வதேச விமான நிலையம் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், அதில் பயணித்தவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளிகளில், விமானம் அதிக வேகத்திலும் செங்குத்தான கோணத்திலும் தரையில் மோதுவதும், அதனைத் தொடர்ந்து பாரிய வெடிப்புச் சம்பவம் இடம்பெறுவதும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குப் பின்னர் எடுக்கப்பட்ட காணொளிகளில், விமானத்தின் சிதைவுகள் மற்றும் வீதியின் உடைந்த பகுதிகளைச் சுற்றி தீப்பிழம்புகள் காணப்படுவதுடன், அப்பகுதியில் மக்கள் நடமாடுவதையும் அவதானிக்க முடிகிறது.
விமானம் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு மிக அருகிலேயே விழுந்துள்ளதாகத் தெரிகின்ற போதிலும், தரையில் இருந்த எவரும் உயிரிழக்கவில்லை என புளோரிடா ஆளுநர் ரொன் டிசாண்டிஸ் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து கருத்துத் தெரிவித்த அவர், இந்த விபத்தை “பேரழிவுத் தன்மை கொண்டது” என வர்ணித்ததுடன், ஏவுகணையொன்று கீழே விழுந்ததைப் போன்று விமானம் தரையில் மோதியதாகவும், வீதியோரத்தில் பாரிய பள்ளமொன்றை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.









