ஜேர்மனியில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் வெட்டுக்கள் மற்றும் கட்டாய இராணுவ சேவை ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நாடளாவிய போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன.
கடந்த சனிக்கிழமை பெர்லின், பிராங்பேர்ட், மியூனிக் மற்றும் ஹம்பர்க் உள்ளிட்ட 34 நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர்.
Gen Z regelt (ஜென் இசட் பொறுப்பேற்கிறது) என்ற இளைஞர் தலைமையிலான இயக்கத்தினால் இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதன்போது, ஜேர்மனியின் நிதி மையமான பிராங்பேர்ட்டில் குறைந்தது இரண்டு கடைகள் சூறையாடப்பட்டுள்ளதுடன், மேலும் பல வர்த்தக நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முகமூடி அணிந்த சிலர் கடைகளின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதுடன், பொலிஸாருடனும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், அவசர சேவைப் பிரிவினரை இலக்குவைத்து பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டதாக பிராங்பேர்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வன்முறை அதிகரித்ததைத் தொடர்ந்து, நகர மையப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வன்முறையில் ஈடுபட்ட கூட்டத்தினரைக் கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் மிளகுத் தெளிப்பான்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதன்போது பல பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெர்லின், கொலோன் மற்றும் ஹம்பர்க் ஆகிய நகரங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பரண்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
பகல் வேளையில் பெரும்பாலும் அமைதியான முறையில் இடம்பெற்ற போராட்டங்கள், மாலை வேளையில் பதற்றமான சூழ்நிலையாக மாறியுள்ளன.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளுதல், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் கட்டாய இராணுவ சேவையை எதிர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.
பொருளாதாரச் சுமைகள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும், இளம் தலைமுறையினர் அதிகரித்து வரும் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் இந்த இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
பேர்லினில் நடைபெற்ற போராட்டத்தில் உரையாற்றிய Gen Z regelt இயக்கத்தின் பேச்சாளர் லினா பிரெட்ரிக், போர் மற்றும் கட்டாயப்படுத்தலுக்கு எதிராகவும், அமைதி மற்றும் சுதந்திரத்திற்காகவும் தமது இயக்கம் போராடுவதாகத் தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர்ஸ் செய்தியின்படி, பிராங்பேர்ட், மியூனிக் மற்றும் பெர்லின் ஆகிய நகரங்களில் மாத்திரம் மொத்தமாக 18,000 பேர் வரை போராட்டங்களில் பங்கேற்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், சுமார் 36,000 பேர் பங்கேற்றதாகப் போராட்ட ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், தீவிரவாதக் குழுக்கள் இந்தப் போராட்டங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கக்கூடும் என ஜேர்மன் அதிகாரிகள் முன்னதாக எச்சரித்திருந்தனர்.
பல நகரங்களில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும், நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பெரும்பாலான போராட்டங்கள் அமைதியான முறையிலேயே இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிகள், பொதுச் சேவைகள் மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பாக ஐரோப்பா முழுவதும் இளைஞர்கள் தலைமையிலான போராட்டங்கள் அதிகரித்து வரும் பின்னணியில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.










