2016ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சாட்சியங்களை மேலதிகமாக ஆராய்வதற்காக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கறுவாத்தோட்டம் பொலிஸார் முன்வைத்த சமர்ப்பணங்களைத் தொடர்ந்து கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இந்த வழக்கின் எட்டாவது சாட்சியாளர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையானதுடன், அடுத்த விசாரணைத் திகதியில் மீண்டும் ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஐந்தாவது சாட்சியாளர் இன்றைய விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதால், அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
2016ஆம் ஆண்டு பெப்ரவரி 6ஆம் திகதி, அப்போதைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இளவரசர் செயிட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்ததை எதிர்த்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே கறுவாத்தோட்டம் பொலிஸாரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகளின்படி, சுமார் 600 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதுடன், கொழும்பு தும்முல்ல பகுதியில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு அருகிலுள்ள வீதிகளை மறித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முஸம்மில், வீரகுமார திஸாநாயக்க, ஜயந்த சமரவீர, பியசிறி விஜேநாயக்க மற்றும் ரொஜர் செனவிரத்ன ஆகியோரும் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.










