பாப்பரசர்கள் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க மக்களை நேரடியாகச் சந்திப்பதற்குப் பயன்படுத்தும் புகழ்பெற்ற ‘போப்மொபைல்’ (Popemobile) வாகனத்தின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், வத்திக்கான் அருங்காட்சியகத்தில் சிறப்புக் கண்காட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கான முன்னோட்டக் கண்காட்சி புதன்கிழமை வத்திக்கான் அருங்காட்சியகத்தில் வெளியிடப்பட்டது. 1930ஆம் ஆண்டு முதல் பாப்பரசர்களின் பயன்பாட்டில் இருந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எட்டு வாகனங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சி வியாழக்கிழமை முதல் பொதுமக்களின் பார்வைக்காக உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படவுள்ளது.
இதனிடையே, வாகனங்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட பாப்பரசர் பதினான்காம் லியோ, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து, புனித ஆசனத்துடனான நிறுவனத்தின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சிக்காகோவில் பிறந்த பாப்பரசர், வாகனத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், பாப்பரசர்களின் பயண முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களுடனும் இணைந்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
“பல தசாப்தங்களாக, போப்மொபைல் ஒரு போக்குவரத்து வாகனம் என்ற நிலையிலிருந்து மக்களைச் சந்திப்பதற்கான ஓர் ஊடகமாகப் பரிணமித்துள்ளது. இதன் மூலம், மதப் பணிகளுக்கான பயணங்களின்போதும் பொது நிகழ்வுகளின்போதும் பாப்பரசர் விசுவாசிகளுக்கு மேலும் நெருக்கமாகச் செல்ல முடிந்துள்ளது” எனப் பாப்பரசர் பதினான்காம் லியோ தெரிவித்தார்.
மேலும், மக்களைச் சென்றடைவதற்கும் நம்பிக்கை, நம்பிக்கை சார்ந்த எதிர்பார்ப்பு மற்றும் அன்புச் செய்திகளை உலகிற்கு எடுத்துச் செல்வதற்குமான திருச்சபையின் பணிக்கு இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உதவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வத்திக்கான் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள மிகப் பழமையான வாகனம், 1930ஆம் ஆண்டு மே 23ஆம் திகதி போப் பதினொன்றாம் பயஸுக்கு வழங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நூர்பர்க் 460 (Mercedes-Benz Nürburg 460) ஆகும். இந்த வாகனத்தில் பட்டுச் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடம்பர இருக்கையும், உயர்தர மரம் மற்றும் உலோகங்களால் செய்யப்பட்ட உள் அலங்காரங்களும் இடம்பெற்றிருந்தன.
வத்திக்கான் அருங்காட்சியகத்தின் வரலாற்று சேகரிப்புப் பிரிவின் பொறுப்பாளர் சாண்ட்ரோ பார்பகல்லோ தெரிவிக்கையில்,
இந்த வாகனம் பாப்பரசர்களின் பயன்பாட்டுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். அத்துடன், பாப்பரசர் மக்களால் பார்க்கப்படுவதற்கும், அவரும் மக்களைப் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பார்ப்பதற்கும் ஏற்ற வகையில் வாகனங்கள் வடிவமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
காலப்போக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட போப்மொபைல் வாகனங்கள், பாப்பரசர்கள் பயணங்களின்போது மக்களுடன் நெருக்கமாகப் பழகுவதற்கும், குறிப்பாக அண்மைக் காலங்களில் அவர்களிடம் கொண்டுவரப்படும் குழந்தைகளுக்கு ஆசி வழங்குவதற்கும் ஏற்ற வகையில் மாற்றமடைந்துள்ளன.
1960ஆம் ஆண்டு போப் இருபத்திமூன்றாம் ஜோனுக்கு வழங்கப்பட்ட 300 d லான்டாலெட் (300 d Landaulet) வாகனத்தில், அகற்றக்கூடிய பின்புறப் பக்க ஜன்னல்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. இதன் மூலம், பயணத்தின்போது அவர் மக்களை நோக்கிக் கையசைத்து அவர்களுடன் தொடர்புகொள்ள முடிந்தது.
1980ஆம் ஆண்டு, புனித இரண்டாம் ஜோன் போல் ஜேர்மனிக்கு மேற்கொண்ட விஜயத்திற்காக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 230 G ரக வாகனத்தைத் தயாரித்தது. இதில் பின்புறத்தில் உயரமான, வெளிப்படையான குவிமாடம் அமைக்கப்பட்டிருந்தது. இது போப்பாண்டவருக்குப் பாதுகாப்பை வழங்கியதுடன், அவரைப் பார்ப்பதற்காகக் கூடியிருந்த மில்லியன் கணக்கான மக்களுக்கும் அவரைத் தெளிவாகப் பார்க்கும் வாய்ப்பை வழங்கியது.
மேலும், மறைந்த பாப்பரசர் பிரான்சிஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னுரிமைகளுக்கு அமைவாக, அவருக்கு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வழங்கிய மின்சார போப்மொபைல் வாகனத்தையும் போப் பதினான்காம் லியோ நினைவுகூர்ந்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், “தொழில்நுட்பப் புத்தாக்கங்களை மனித கண்ணியம், இயற்கைப் பாதுகாப்பு மற்றும் பொதுநலன் ஆகியவற்றுக்குச் சேவையாற்றும் வகையில் தொடர்ந்து பயன்படுத்துமாறு உங்களை ஊக்குவிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.










